போகி பண்டிகையையொட்டி பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் - தமிழக அரசு வேண்டுகோள்
நமது பொங்கல் திருநாளுக்கு முந்தைய நாள் 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்பதன் அடிபடையில் இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகையாக கொண்டாடியுள்ளனர். இதனால் காற்றுமாசுபடாமல், சுற்றுசூழலுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் தற்போது நிலைமை அப்படியில்லை, பழைய பொருட்கள் என்று பிளாஸ்டிக் பொருட்கள் செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், பழைய டயர், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை மக்கள் எரிக்கிறார்கள். இதனால் ஏற்படும் அடர்ந்த புகை காரணமாக விமான சேவைகளில் பாதிப்பு ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. சென்னையிலும் இப்புகையால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாவதோடு, பல விபத்துகளும் ஏற்படுகிறது. இந்த நச்சு புகையால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்றவற்றாலும் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
15 இடங்களில் 24 மணிநேரமும் காற்று தர அளவு ஆய்வு - 100 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
இத்தகைய செயல்களை பொதுமக்கள் விழிப்புணர்வு இல்லாமல் செய்து வருவதால், விழிப்புணர்வு பிரச்சாரத்தை கடந்த 19ஆண்டுகளாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் மக்கள் மத்தியில் நடத்தி வருகிறது. இதன் விளைவாக கடந்த சில வருடங்களில் ரப்பர் டுயூப், பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் எரிப்பது பெருமளவில் குறைந்துள்ளது. அதன்படி, இந்தாண்டும் பிரச்சாரம் நடத்த ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் சென்னையில் 8 முதல் 12ம் தேதி வரை சுமார் 100 மெட்ரிக் டன் பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்றும் நாளையும் 15 இடங்களில் 24 மணிநேரமும் காற்றுத்திறனை கண்காணிக்க காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வுசெய்ய ஏற்பாடு செய்துள்ளது. இதனையடுத்து, காற்றின் தர அளவு வாரிய இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.