LOADING...
திமுக வேட்பாளர் பட்டியல் 2026: கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டி; கரூரை விட்டு வெளியேறிய செந்தில் பாலாஜி
திமுக வேட்பாளர் பட்டியல் 2026ஐ வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்

திமுக வேட்பாளர் பட்டியல் 2026: கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டி; கரூரை விட்டு வெளியேறிய செந்தில் பாலாஜி

எழுதியவர் Sekar Chinnappan
Mar 28, 2026
04:43 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்ட விறுவிறுப்பை எட்டியுள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுக தான் போட்டியிடும் 164 தொகுதிகளுக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இந்தப் பட்டியலை வெளியிட்டார். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைமையில் திமுக இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறது. கூடுதல் விவரங்கள் இங்கே:-

முக்கிய பிரமுகர்கள்

முக்கியத் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களின் தொகுதிகள்

வெளியிடப்பட்டுள்ள பட்டியலின்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் போட்டியிடுகிறார். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் களம் காண்கிறார். மூத்த அமைச்சர்களான துரைமுருகன் (காட்பாடி), கே.என்.நேரு (திருச்சி மேற்கு), எ.வ.வேலு (திருவண்ணாமலை) ஆகியோருக்கும் மீண்டும் அதே தொகுதிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் உள்ள பெரும்பாலான அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, கொங்கு மண்டலத்தில் திமுகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக மாறியுள்ள செந்தில் பாலாஜி கரூரை விட்டு வெளியேறி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

ஓபிஎஸ் அணி

திமுகவில் இணைந்த ஓபிஎஸ் மற்றும் வைத்திலிங்கத்திற்கு வாய்ப்பு

இந்த வேட்பாளர் பட்டியலின் மிக முக்கியமான அம்சமாக, அண்மையில் திமுகவில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தனது கோட்டையான போடிநாயக்கனூர் தொகுதியிலேயே திமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அதேபோல், வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியில் களம் இறங்குகிறார். இவர்கள் இருவரின் வருகை தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் திமுகவின் பலத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

புதுமுகங்கள்

கல்வித் தகுதியும் புதுமுகங்களின் பங்களிப்பும்

திமுக வேட்பாளர் பட்டியலில் இம்முறை இளைஞர்களுக்கும், படித்தவர்களுக்கும் அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. 164 வேட்பாளர்களில் 125 பேர் பட்டதாரிகள், 29 பேர் சட்டம் பயின்றவர்கள், 15 பேர் மருத்துவர்கள் மற்றும் 7 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், கட்சியின் அடிமட்டத் தொண்டர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் 60க்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு முதல்முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

பெண் வேட்பாளர்கள்

பெண் வேட்பாளர்கள் மற்றும் சமூக நீதி

பெண்கள் பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தவரை, திமுக சார்பில் இம்முறை 18 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அமைச்சர் கீதா ஜீவன் (தூத்துக்குடி) உட்பட பல முக்கியப் பெண் தலைவர்கள் மீண்டும் களத்தில் உள்ளனர். சமூக நீதியைக் காக்கும் வகையில் அனைத்து சமூகத்தினருக்கும் உரியப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை தெரிவித்துள்ளது. மார்ச் 29 ஆம் தேதி முதல் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளன.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement