அதிமுக - திமுக ரகசியக் கூட்டணியா? ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை
செய்தி முன்னோட்டம்
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மாநில அரசியலில் இதுவரை கண்டிராத பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. ஒருபுறம் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைக்கத் தயாராகி வரும் நிலையில், மறுபுறம் திமுக மற்றும் அதிமுக இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியாகும் தகவல்கள் களத்தைக் சூடாக்கியுள்ளன. நேற்றிரவு முதல் ஊடகங்களில் ஒரு பரபரப்பான செய்தி வெளியாகி வருகிறது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக-வை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்க, திமுக-வின் வெளி ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக இரு கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்களும் நேற்று பல மணி நேரம் ரகசிய ஆலோசனை நடத்தியதாகவும், அதிமுக எம்.எல்.ஏ-க்களைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற ஏற்பாடுகள் நடப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக
அதிமுக முகாமில் குழப்பம்
அதிமுக தரப்பில் திமுகவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டாலும், அதிமுக மூத்த நிர்வாகி இதை மறுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதே சூழலில், அதிமுக-விற்குள் மற்றொரு தரப்பினர் விஜய்யின் தவெக-விற்கு ஆதரவளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். சி.வி. சண்முகம் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனையில் வேலுமணி, கே.சி. கருப்பண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டது இந்த உட்கட்சி மோதலை உறுதிப்படுத்துகிறது.
ஸ்டாலின்
மு.க. ஸ்டாலினின் அதிரடிப் பேட்டி
இந்தக் குழப்பங்களுக்கு இடையே, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். "தனிப்பெரும் கட்சியான தவெக ஆட்சி அமைக்க திமுக எந்த முட்டுக்கட்டையும் போடாது. அடுத்த 6 மாதங்களுக்கு அவர்களின் செயல்பாடுகளைக் கவனிப்போம்." "திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களைத் தவெக அரசு தொடர வேண்டும் என எதிர்பார்க்கிறேன்." "உடனடியாக மீண்டும் ஒரு தேர்தலைச் சந்திக்க திமுக விரும்பவில்லை. மாநிலத்தில் அரசியலமைப்புச் சட்டச் சிக்கல் ஏற்படுவதையும் நாங்கள் விரும்பவில்லை." என தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். இதன்மூலம் ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தைகள் பற்றி நிலவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.