
திருப்பதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திவ்ய தரிசனம் மீண்டும் துவக்கம்
செய்தி முன்னோட்டம்
ஆந்திர மாநிலம் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களுள் பாதயாத்திரையாக மலையேறி சென்று ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
அதற்கான ஏற்பாடாகாவே திவ்ய தரிசனம் என்னும் பெயரில் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டது.
திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிப்பிரி, ஸ்ரீனிவாசா மங்காபுரம் அருகில் உள்ள ஸ்ரீவாரி மெட்டு ஆகிய நடைபாதை வழியாக பாதையாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு இடையில் சாமி தரிசனத்திற்கு உரிய டோக்கன்கள் வழங்கப்படும்.
அதன்படி அலிப்பிரி நடைபாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு தினமும் பத்தாயிரம் டோக்கன்களும், ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு தினமும் ஐந்தாயிரம் டோக்கன்களும் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் இந்த நடைமுறையானது கொரோனா காலத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
திவ்ய தரிசன டோக்கன்கள்
இன்று முதல் திவ்ய தரிசனம் துவங்கியது
திருமலை திருப்பதியில் கொரோனா காலகட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது.
தினமும் லட்சக்கணக்கில் பக்தர்களுக்கு தரிசனம் வழங்கும் TTD கொரோனா காலத்தில் சில ஆயிர பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என எண்ணிக்கையினை குறைத்து அனுமதி அளித்தது.
அப்பொழுது ரத்து செய்யப்பட்ட தரிசனங்களில் ஒன்று தான் இந்த திவ்ய தரிசனம் ஆகும்.
இந்நிலையில் தற்போது பக்தர்கள் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் திவ்ய தரிசனத்தினை துவங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது.
அதன் படி தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் பக்தர்கள் கூட்டமும் அதிகரிக்கும்.
இதனையடுத்து ஏப்ரல் 1 இன்று முதல் மீண்டும் பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.