Loading...
தவெகவுக்கு ஆதரவு இல்லை! தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி என இடதுசாரிகள் அறிவிப்பு
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி என இடதுசாரிகள் அறிவிப்பு

தவெகவுக்கு ஆதரவு இல்லை! தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி என இடதுசாரிகள் அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 13, 2026
05:44 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டப்பேரவையில் காலியாக உள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் திமுக, அதிமுக மற்றும் தவெக ஆகிய பிரதான கட்சிகள் போட்டியிடும் நிலையில், இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் களமிறங்கும் நிலையில், செப்டம்பர் 15 அன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு.வீரபாண்டி விளக்கம்

தவெகவுக்கு ஆதரவு இல்லை

இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்துப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டி, தற்போதைய அரசியல் சூழலில் இந்த இடைத்தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தமிழக மண்ணில் ஜனநாயகத்தின் விழுமியங்களை 70 ஆண்டுகளாகக் காத்து வரும் இடதுசாரிகளுக்கு பல்வேறு ஜனநாயக சக்திகளும் ஆதரவளிக்கும் என நம்புவதாக அவர் கூறினார்.

சட்டமன்றத் தேர்தலில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த போதிலும், வரவிருக்கும் இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு இல்லை என்ற நிலைப்பாட்டை இடதுசாரிகள் உறுதியாக எடுத்துள்ளனர்.

பெ.சண்முகம் அதிரடி

தவெக ஆட்சிக்கு ஆபத்தில்லை

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் திணிக்கப்பட்ட இந்த இடைத்தேர்தலில், தவெக அரசின் கொள்க மாறுபாடுகள் காரணமாகவே தனித்துப் போட்டியிடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறினார்.

பாஜக அதிகாரத்திற்கு வருவதைத் தடுக்கவே தவெக அரசுக்கு அளித்து வரும் வெளிப்புற ஆதரவு தொடரும் என்றும், இதனால் தவெக ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

மேலும் தங்களின் இந்த முடிவை திமுக ஆதரவு நிலைப்பாடு என்று கூறுவது முற்றிலும் தவறானது என்றும், சட்டமன்றத்தில் மக்களின் குரலை வலுப்படுத்தவே போட்டியிடுவதாகவும் அவர் கூறினார்.

ADVERTISEMENT

பல முனைப் போட்டி

பல முனைப் போட்டியால் சூடுபிடிக்கும் தேர்தல் களம்

ஏற்கெனவே திமுக, அதிமுக மற்றும் ஆளும் தவெக ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நிலவி வந்த சூழலில், தற்போது இடதுசாரிகளின் தனித்துப் போட்டி அறிவிப்புத் தேர்தல் களத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.

சட்டமன்றத்தில் தங்களுக்குள்ள 4 எம்எல்ஏக்களின் பலத்தை அதிகரிக்கும் நோக்கிலும், இடதுசாரி கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் இதுவல்ல என்ற போதிலும், களத்தில் உள்ள அனைத்து பிரதான கட்சிகளுக்கும் இடதுசாரிகளின் இந்த தனித்து நிற்கும் முடிவு கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT