தைப்பூச திருவிழா: கோவில்களில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவில் இன்று தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. முருகப் பெருமான், அசுரர்களை வதம் செய்து, தேவர்களை காப்பதற்காக, ஆதிபராசக்தியிடம் வேலை பெற்ற தினமே தைபூச திருநாள். இந்நாள் முருகனுக்கு உகந்த தினமாக கருதப்படுகிறது. தை மாதத்தில் பௌர்ணமி திதி அன்று வரும் பூச நட்சத்திர நாள் தான் தைப்பூசத்திருநாள் ஆகும். இந்த நாள் அன்று முருகனை தரிசித்தால், வேண்டுவது நடக்கும் என்பது ஐதீகம். அதனால், இன்று அதிகாலையிலேயே முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய இடங்களில் பக்தர்கள் அதிகளவு கூடுவார்கள் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இன்று பௌர்ணமி என்பதால் திருவண்ணமலைக்கு ஏராளமான பக்தர்கல் கிரிவலம் சென்றுள்ளனர்.
மலேஷியா முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம்
பழனி மலையில் பக்தர்கள் கூட்டம்
திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம்
வடலூரில் ஜோதி தரிசனம்
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார் பெருமான் தோற்றுவித்த வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்தியஞான சபையில் இன்று தைப்பூச ஜோதி தரிசன வழிபாடு நடைபெற்றது. ஜோதி தரிசனத்தை பெறுவதற்காக பக்தர்கள் பலரும் அங்கே கூடியிருந்தனர். கருப்பு, நீலம், பச்சை என ஏழு வண்ண திரைகளை நீக்கிய பிறகு தான் தீபத்தின் ஜோதி ஒளியைக் காண இயலும். வள்ளலார் ஏற்றி வைத்த அணையாதீபம் இங்கே வழிபாட்டில் இருக்கிறது.