புதிய சீஸனின் ஆரம்பம்; மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார் தேவேந்திர ஃபட்னாவிஸ்; ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் துணைமுதல்வராக பொறுப்பேற்பு
மகாராஷ்டிர மாநில முதல்வராக பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் வியாழக்கிழமை (டிசம்பர் 5) மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவியேற்றார். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஃபட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்றதையொட்டி, ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். மகாராஷ்டிராவின் துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் பதவியேற்றனர். மஹாயுதி தலைவர்களுடன் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் ஜேபி நட்டா மற்றும் பிற பாஜக தலைவர்களும் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இவர்களுடன் ஷாருக்கான், சல்மான் கான், மற்றும் ரன்பீர் கபூர் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, ஆனந்த் அம்பானி, குமார் மங்கலம் பிர்லா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அம்மா ஆசியுடன் ஒரு புதிய சீஸனின் ஆரம்பம்
இன்று மூன்றாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்ற தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆசாத் மைதானத்திற்குச் செல்வதற்கு முன், தனது தாயார் நெற்றியில் திலகம் பூசிக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதற்கான புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட தேவேந்திர ஃபட்னாவிஸ், "அம்மாவின் ஆசியுடன் ஒரு புதிய சீஸனின் ஆரம்பம்..." எனப் பதிவிட்டுள்ளார். ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் 40,000 பேர் கலந்து கொண்டனர். மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர்கள் யோகி ஆதித்யநாத், பஜன்லால் சர்மா, புஷ்கர் சிங் தாமி, சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மகாராஷ்டிர அரசு பதவியேற்பு விழாவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.