பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம்
பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு விவரங்களை வெளியிட குஜராத் பல்கலைக்கழகத்திற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை குஜராத் மாநில உயர்நீதிமன்றம் இன்று(மார் 31) ரத்து செய்தது. மேலும், இந்த விவரங்களைக் கேட்டதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் உயர்நீதிமன்றம் ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது. கெஜ்ரிவால் நான்கு வாரங்களுக்குள் குஜராத் மாநில சட்ட சேவைகள் ஆணையத்திடம் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. "தங்கள் பிரதமர் எவ்வளவு பதித்திருக்கிறார் என்பதை அறிய நாட்டிற்கு உரிமை இல்லையா? நீதிமன்றத்தில் அவரது பட்டத்தை வெளியிட ஏன் கடுமையாக எதிர்க்கின்றனர். பட்டப்படிப்பு பற்றிய விவரங்களை கேட்டதற்கு அபராதம் விதிக்கப்படுமா? படிக்காத அல்லது குறைவாக படித்த பிரதமர் நாட்டிற்கு ஆபத்தானவர்." என்று அரவிந்த் கெஜ்ரிவால் இதற்கு ட்வீட் செய்துள்ளார்.
குஜராத் பல்கலைக்கழகம் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு
2016 ஆம் ஆண்டில், தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு கீழ் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளித்த மத்திய தகவல் ஆணையம், பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டங்கள் குறித்த தகவல்களை அளிக்குமாறு பிரதமர் அலுவலகம் (PMO), குஜராத் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு உத்தரவிட்டது. அதன் பிறகு, அ ந்த உத்தரவை எதிர்த்து குஜராத் பல்கலைக்கழகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பிரதமர் மோடியின் தேர்தல் ஆவணங்கள், குஜராத் பல்கலைக்கழகத்தில் அவர் 1978இல் பட்டம் பெற்றதாகவும், 1983இல் டெல்லி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றதாகவும் கூறுகின்றன.