பாஜகவிற்கு ஆதரவாக மாறுகிறதா திமுக? எதிர்க்கட்சிகளை அதிர வைத்த தொகுதி மறுவரையறை மசோதா 2026
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் பெருகி வரும் மக்கள் தொகை மாற்றங்களுக்கு ஏற்ப, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளையும், இடங்களின் எண்ணிக்கையையும் மாற்றி அமைக்கும் சட்டப்பூர்வ செயல்முறை தான் தொகுதி மறுவரையறை எனப்படும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, இதற்கெனத் தனியாக அமைக்கப்படும் தொகுதி மறுவரையறை ஆணையம் இந்த எல்லை நிர்ணயப் பணிகளை மேற்கொள்ளும். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தய தென் மாநிலங்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்ற இடங்கள் 2026 ஆம் ஆண்டு வரை மாற்றமின்றி முடக்கி வைக்கப்பட்டிருந்தன. தற்பொழுது அந்த காலக்கெடு முடிவுக்கு வந்துள்ளதால், மத்திய அரசு புதிய மசோதாவைக் கொண்டு வந்துள்ளது.
அச்சம்
தென் மாநிலங்களுக்கு ஏன் இந்த அச்சம்?
மத்திய அரசு தற்பொழுது கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை மசோதா 2026, நாடாளுமன்றத்தின் மொத்த இடங்களை 543லிருந்து 850 ஆக உயர்த்த முன்மொழிகிறது.
ஒருவேளை வெறும் மக்கள் தொகை விகிதாச்சாரத்தின் அடிப்படையில் மட்டும் புதிய தொகுதிகள் பிரிக்கப்பட்டால், குடும்பக் கட்டுப்பாடு போன்ற மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி மக்கள் தொகையைக் குறைத்துள்ள தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற தென் மாநிலங்களின் எம்பிக்கள் எண்ணிக்கை சரிந்து, வட மாநிலங்களின் ஆதிக்கம் நாடாளுமன்றத்தில் மேலும் அதிகரித்துவிடும் என்ற அச்சம் தென் மாநில அரசியல் கட்சிகள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.
அமித்ஷா
அமித்ஷாவின் 50% கூடுதல் இடங்கள் விளக்கம்
இந்த அச்சத்தைப் போக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த மசோதாவால் தென் மாநிலங்களுக்கு எவ்வித அநீதியும் இழைக்கப்படாது என்று உறுதியளித்துள்ளார்.
50 சதவீத இடங்கள் அதிகரிப்பு என்ற புதிய மாடலின் படி, நாடாளுமன்றத்தின் ஒட்டுமொத்த இடங்கள் 816 ஆக உயரும்.
இதன் மூலம் தமிழ்நாட்டின் தற்போதைய 39 எம்பிக்கள் எண்ணிக்கை, 59 முதல் 61 ஆக உயரும் என்றும், ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ விகிதாச்சாரம் 7.18%லிருந்து 7.23% ஆகத் தக்கவைக்கப்படும் என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
திமுக
திமுகவின் நிலைப்பாடும் எம்பிக்களின் பலமும்
நாடாளுமன்ற மக்களவையில் 22 எம்பிக்களையும், மாநிலங்களவையில் 10 எம்பிக்களையும் கொண்டுள்ள திமுகவின் முடிவு இந்த மசோதா நிறைவேறுவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஆரம்பத்தில் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக இந்த மசோதாவைத் தீவிரமாக எதிர்த்த திமுக, தற்பொழுது தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதம் குறையாமல் 61 இடங்கள் உறுதி செய்யப்படும் பட்சத்தில், சில திருத்தங்களுடன் மசோதாவை ஆதரிக்கலாம் என்ற பேச்சுக்கள் அக்கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளன.
மசோதாவில் தங்களது பரிந்துரைகள் சேர்க்கப்பட்டால் அதை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை என திமுக தரப்பில் கூறப்படுவது கூட்டணி கட்சிகள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மசோதா
நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறுமா?
மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த 131வது அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற சிறப்பு பெரும்பான்மை (மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள்) தேவையாகும்.
தற்போதைய அரசியல் சூழலில், ஆம் ஆத்மி மற்றும் சிவசேனா (உத்தவ் அணி), திரிணாமுல் காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகளின் பல எம்பிக்கள் பாஜகவின் கூட்டணி நிலைப்பாட்டிற்கு ஆதரவாக மாறியுள்ளதால், பாஜக இந்த மசோதாவை எளிதாக நிறைவேற்றிவிடும் என்று அரசியல் கணிப்புகள் கூறுகின்றன.
எனினும், தெளிவான வரைவு மசோதா தாக்கல் செய்யப்பட்ட பின்னரே இறுதி முடிவை எடுக்க முடியும் என்பதில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக உறுதியாக உள்ளதாக கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.