Loading...
ஜந்தர் மந்தரில் தடியடி, 5 மெட்ரோ ஸ்டேஷன்கள் மூடல்! சிஜேபி நாடாளுமன்ற முற்றுகைப் பேரணியால் டெல்லியில் பெரும் பரபரப்பு
சிஜேபி நாடாளுமன்ற முற்றுகைப் பேரணியால் டெல்லியில் பெரும் பரபரப்பு

ஜந்தர் மந்தரில் தடியடி, 5 மெட்ரோ ஸ்டேஷன்கள் மூடல்! சிஜேபி நாடாளுமன்ற முற்றுகைப் பேரணியால் டெல்லியில் பெரும் பரபரப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Jul 20, 2026
11:41 am

செய்தி முன்னோட்டம்

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று திங்கட்கிழமை (ஜூலை 20), காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) அறிவித்த சலோ சன்சத் முற்றுகைப் பேரணிக்காக தடையையும் மீறி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் டெல்லியில் குவிந்தனர். ஜந்தர் மந்தர் பகுதியில் ஒன்று கூடிய போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதால் அந்தப் பகுதியே பெரும் போர்க்களமாக மாறியது. நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

இன்டர்நெட் சேவை

மத்திய டெல்லியில் மொபைல் இன்டர்நெட் சேவை முடக்கம்

போராட்டம் காரணமாக பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து, மத்திய டெல்லியின் சில முக்கியப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மொபைல் இன்டர்நெட் சேவைகள் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளன.

வதந்திகள் பரவுவதைத் தடுக்கவும், போராட்டக்காரர்கள் சமூக வலைதளங்கள் மூலம் ஒருங்கிணைவதைத் தவிர்க்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தங்களை ஆங்காங்கே போலீசார் தடுத்து நிறுத்தினாலும், ஆதரவாளர்கள் அனைவரும் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், வன்முறையின்றி அன்பான வழியிலேயே நாம் இந்த அறப்போராட்டத்தில் வெல்ல வேண்டும் என்றும் சிஜேபி தலைமை தங்களது தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மெட்ரோ நிலையங்கள்

தலைநகரில் 5 முக்கிய மெட்ரோ நிலையங்கள் அதிரடி மூடல்

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, டெல்லியின் மிக முக்கியமான 5 மெட்ரோ நிலையங்கள் மறு உத்தரவு வரும் வரை அதிரடியாக மூடப்பட்டுள்ளன.

ராஜீவ் சவுக், ஜன்பத், படேல் சவுக், சென்ட்ரல் செக்ரடேரியட் மற்றும் சேவா தீர்த் ஆகிய மெட்ரோ நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் முழுமையாகப் பூட்டப்பட்டதால், டெல்லியின் பரபரப்பான சந்திப்பான ராஜீவ் சவுக்கில் நூற்றுக்கணக்கான பயணிகள் தங்களது இலக்குகளை அடைய முடியாமல் தவித்தனர்.

பலர் நீண்ட தூர மாற்றுப் பாதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதால் மெட்ரோ போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.

ADVERTISEMENT

சோனம் வாங்சுக்

மருத்துவமனையில் இருந்து சோனம் வாங்சுக் விடுத்துள்ள கடிதம்

இக்கல்வித்துறை சீர்திருத்தப் போராட்டத்தில் ஜூன் 28 முதல் ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வந்த பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், உடல்நிலை நலிவடைந்ததால் கடந்த சனிக்கிழமை போலீசாரால் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இன்று மருத்துவமனையில் இருந்து அவர் வெளியிட்டுள்ள கையால் எழுதப்பட்ட கடிதத்தில், தேர்வுத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறையின் தோல்விகளுக்கு மத்திய அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும் அல்லது நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்புவோம் எனப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தமக்கு உறுதியளிக்க வேண்டும், அதுவரை தனது உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT