3 மாணவர்கள் பலியானதை தொடர்ந்து கட்டிடங்களின் அடித்தளத்தில் இயங்கும் பயிற்சி மையங்களுக்கு எதிராக நடவடிக்கை
டெல்லியின் சில பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால், ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளம் வெள்ளத்தில் மூழ்கியது. அதில் சிக்கி மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். அது நடந்து சில மணிநேரங்களே ஆகும் நிலையில், கட்டிடங்களின் அடித்தளத்தில் இயங்கும் அனைத்து பயிற்சி மையங்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு மேயர் ஷெல்லி ஓபராய் இன்று உத்தரவிட்டார். பழைய ராஜிந்தர் நகர் பகுதியில் உள்ள ராவின் ஐஏஎஸ் படிப்பு வட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து, ஒரு அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்ட ஷெல்லி ஓபராய், அடித்தளத்தில் இயங்கும் பயிற்சி மையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி மாநகராட்சி (எம்சிடி) ஆணையருக்கு உத்தரவிட்டார்.
திடீரென தண்ணீர் புகுந்ததால் மாணவர்கள் பலி
இதுபோன்ற பயிற்சி மையங்கள் கட்டிட விதிகளை மீறுவதாகவும், விதிமுறைகளின்படி இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்த விபத்திற்கு எம்சிடியின் அதிகாரிகள் யாரேனும் காரணமா என்பதை அடையாளம் காண உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் டெல்லி மேயர் கூறியுள்ளார். நேற்று இரவு, தானியா சோனி, ஸ்ரேயா யாதவ் மற்றும் நவீன் டெல்வின் என அடையாளம் காணப்பட்ட மூன்று UPSC சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள், பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் திடீரென தண்ணீர் புகுந்ததால் அதில் மணிக்கணக்கில் சிக்கி உயிரிழந்தனர். இதனையடுத்து, கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர். அதில் அந்த ஐஏஎஸ் பயிற்சி மைய உரிமையாளரும், ஒருங்கிணைப்பாளரும் அடங்குவர்.