டெல்லியைத் தொடர்ந்து மும்பை விமான நிலையத்திலும் விமான சேவை பாதிப்பு; 300+ விமானங்கள் தாமதம்
செய்தி முன்னோட்டம்
தலைநகர் டெல்லியில் உள்ள வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் (ATC) மெசேஜிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நாட்டின் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தச் சிக்கலால் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 300க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. இது குறித்து மும்பை சத்ரபதி சிவாஜி மஹாராஜ் சர்வதேச விமான நிலையம் (CSMIA) ஒரு ஆலோசனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. டெல்லியில் உள்ள தானியங்கிச் செய்தி மாற்று அமைப்பு (AMSS) பாதிக்கப்பட்டுள்ளதால், மும்பை விமான நிலையத்தின் செயல்பாடுகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விமான நிலையம் தெரிவித்துள்ளது.
மும்பை
மும்பை விமான நிலையம் அறிக்கை
AMSS அமைப்பானது, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் விமானத் திட்டமிடலுக்கு ஆதரவளிக்கிறது. இந்தக் கோளாறைச் சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர் என்று மும்பை விமான நிலையம் தனது ஆலோசனையில் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பக் கோளாறு, ஆட்டோமேஷன் மென்பொருளில் மால்வேர் (Malware) தூண்டப்பட்ட அதிகப்படியான சுமையின் விளைவாக இருக்கலாம் என்று தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கோளாறு காரணமாக, விமான நிறுவனங்களின் செயல்பாடுகளில் தாமதங்கள் ஏற்படலாம். எனவே, பயணிகள் தங்கள் விமானங்களின் நிலவரம் மற்றும் திருத்தப்பட்ட அட்டவணைகள் குறித்து அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். டெல்லி மற்றும் மும்பையில் ஏற்பட்ட இந்தத் தொடர்ச்சியான பாதிப்பு காரணமாக, விமானப் பயணிகள் கடுமையான சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.