மூச்சுவிடத் திணறும் டெல்லி! அபாய கட்டத்தை தாண்டிய காற்று மாசுபாடு
செய்தி முன்னோட்டம்
இந்திய தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஞாயிற்றுக்கிழமை மிக மோசமான நிலையை எட்டியது. மாலை 4 மணி நிலவரப்படி, காற்றின் தரக் குறியீடு (AQI) 440 ஆகப் பதிவாகியுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இதேபோன்ற மோசமான நிலை காணப்பட்டது. காற்றில் நிலவும் தேக்கநிலை, அடர் மூடுபனி மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வெளியேறும் புகை போன்ற காரணங்களால் இந்தத் திடீர் மாசு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (CAQM), டெல்லி மற்றும் தேசியத் தலைநகர் பிராந்தியத்தில் (NCR) 'கிராப்-4' (GRAP Stage-IV) எனப்படும் மிகக்கடுமையான கட்டுப்பாடுகளை உடனடியாக அமல்படுத்தியுள்ளது.
விமான சேவைகள்
பாதிக்கப்பட்ட விமான சேவைகள்
மோசமான காற்றின் தரத்துடன் இணைந்த அடர் மூடுபனி காரணமாகப் போக்குவரத்துத் துறையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை டெல்லியின் பல பகுதிகளில் பார்வைத் திறன் (Visibility) பூஜ்யம் மீட்டராகக் குறைந்ததால், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. திங்கட்கிழமை காலை மிதமானது முதல் அடர்த்தியான மூடுபனிக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. திங்கட்கிழமை AQI சற்று உயர்ந்து 'மிகவும் மோசமாக' இருக்கும் என்றும், செவ்வாய்க்கிழமை அதே வரம்பிற்குள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பநிலை 5.3 டிகிரி செல்சியஸாகக் குறைந்த நிலையில், வரும் நாட்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டாலும், காற்று மாசில் இருந்து உடனடி நிவாரணம் கிடைப்பது கடினம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.