17 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் வீச்சு - டெல்லியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம்
டெல்லி உத்தம் நகர் சாலையில் சகோதரியுடன் சென்று கொண்டிருந்த 17 வயது மாணவி மீது ஆசிட்டை வீசிவிட்டு இருவர் பைக்கில் தப்பி ஓட்டம். ஆசிட் உடலில் பட்டதால் அலறி துடித்த மாணவியை டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். நேற்று(டிச.14) காலை நடந்த இந்த சம்பவத்தால் டெல்லி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த 17 வயது மாணவியின் மீது நைட்ரிக் ஆசிட் வீசப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். காயமடைந்த மாணவிக்கு முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் கிட்டத்தட்ட 8% காயம்பட்டுள்ளதாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், காயத்தின் அளவை சரியாக கணிக்க 48இல் இருந்து 73 மணி நேரம் வரை ஆகலாம் என்றும் தகவல் அளித்துள்ளனர்.
ஆசிட் வீசியது யார்?
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக சச்சின் அரோரா(20) என்பவரையும் இவருக்கு உடந்தையாக இருந்த குற்றவாளிகளாக ஹர்ஷித் அகர்வால்(19) மற்றும் விரேந்தர் சிங்(21) என்பவர்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் கமிஷ்னர் சாகர் ப்ரீத் ஹூடா, "ஆன்லைனில் இ-வாலட் மூலம் பணம் செலுத்தி ஆசிட்டை அரோரா வாங்கி இருக்கிறார். அரோராவுக்கு பாதிக்கப்பட்ட சிறுமியை நான்றாகத் தெரியும். இருவரும் 2-3 மாதங்களுக்கு முன் பிரேக்-அப் செய்துள்ளனர். அதன் பின், பாதிக்கப்பட்ட சிறுமி அரோராவுடன் பேசுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார். இதனால், கோபம் அடைந்த அரோரா பழி வாங்குவதற்காக இதைத் திட்டம் போட்டு செய்துள்ளார்." என்றார்.