LOADING...
சர் க்ரீக் எல்லையில் பாகிஸ்தானின் ராணுவ இயக்கங்கள் அதிகரிப்பு: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
இந்தியா கடுமையான பதிலடி அளிக்க தயார் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்

சர் க்ரீக் எல்லையில் பாகிஸ்தானின் ராணுவ இயக்கங்கள் அதிகரிப்பு: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 02, 2025
05:56 pm

செய்தி முன்னோட்டம்

குஜராத்தின் சர் க்ரீக் எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் சமீபத்தில் மேற்கொண்ட ராணுவ உள்கட்டமைப்பு பலப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு, இந்தியா கடுமையான பதிலடி அளிக்க தயார் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். தசரா விழாவை முன்னிட்டு பூஜ் ராணுவ தளத்தில் ஆயுத பூஜை செய்த பின்னர் ராணுவ வீரர்களிடம் உரையாற்றிய அவர், 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை குறிப்பிட்டு, இந்தியாவின் பாதுகாப்பை சவாலாக எடுத்த பாகிஸ்தான் முயற்சிகள் தோல்வியடைந்ததாகக்கூறினார். "லே முதல் சர் க்ரீக் வரை பாகிஸ்தான் மேற்கொண்ட ஊடுருவல் முயற்சிகள் முற்றாக தோல்வியடைந்தன. இந்திய படைகள் பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்பை உடைத்து தாக்கின, இது உலகத்திற்கு நம்மால் எப்போதும், எங்கும் பதிலடி அளிக்க முடியும் என்பதை தெளிவாக காட்டியது," எனக்கூறினார்.

உரை

அவரது உரையின் முக்கிய குறிப்புகள்

பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை: "சர் க்ரீக் பகுதியில் எந்தவொரு ஆக்கிரமிப்பும் புவியியல் மற்றும் வரலாற்றையே மாற்றும் அளவில் பதிலடியாகும்". "பாகிஸ்தானின் நோக்கங்கள் தெளிவற்றதும், குறைபாடுகளுடனும் இருக்கின்றன. பேச்சுவார்த்தைக்கு இந்தியா எப்போதும் தயாராக இருந்தும், பாகிஸ்தான் சந்தேகத்தக்க முறையில் நடந்துகொள்கிறது." இந்திய ராணுவத்தின் வலிமை: "1965 போரில் லாகூர் வரை இந்திய ராணுவம் சென்றது; இன்று 2025-ல் கராச்சி வரை செல்லும் திறன் நமக்கிருக்கிறது. இந்தியாவின் வலிமையின் மூன்று தூண்களான மூன்று மூலைகளாகும் ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை. அவை ஒருங்கிணைந்தால் எந்த சவாலையும் தாண்ட முடியும்."

சர்ச்சை

சர் க்ரீக் - ஒரு சர்ச்சைக்குரிய நிலம்

சர் க்ரீக் என்பது பாகிஸ்தானும் குஜராத்தின் ரான் ஆஃப் கட்சும் இடையே உள்ள 96 கி.மீ நீளமுள்ள அலை முகத்துவாரம். கடல் எல்லையைப் பற்றிய இருநாடுகளின் உரிமை மீதான கருத்துவேறுபாடுகள் காரணமாக இது பல ஆண்டுகளாக சர்ச்சையாகவே இருந்து வருகிறது. பாகிஸ்தான் சர் க்ரீக் எல்லையில் மேற்கொண்டு வரும் ராணுவ கட்டமைப்புகளின் விரிவாக்கம் குறித்து இந்தியா தக்க முறையில் பதிலளிக்கத் தயார் என்ற நிலைப்பாட்டுடன் இருப்பதாக தற்போது பாதுகாப்பு அமைச்சர் கூறி இருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.