லட்டு சர்ச்சை ஓய்ந்ததும் திருப்பதி தேவஸ்தானத்தில் வெடித்தது 'பட்டு சால்வை ஊழல்'
செய்தி முன்னோட்டம்
உலக புகழ் பெற்ற திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD), பல ஆண்டுகளாக பட்டு சால்வை விநியோகத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. இந்த மோசடி சுமார் ஒரு பத்தாண்டுக் காலமாக நடந்திருக்கலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தர்களுக்கு, நன்கொடையாளர்கள் மற்றும் விஐபி தரிசனத்தின் போது வழங்கப்படும் 'பட்டு சால்வைகள்', உண்மையில் 100% பாலியஸ்டர் துணியால் செய்யப்பட்டவை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 2015 முதல் 2025 வரையிலான பத்தாண்டுக் காலத்தில் இந்த மோசடி நடந்திருப்பதாக TOI செய்தி தெரிவிக்கிறது.
விசாரணை
விசாரணை மற்றும் நடவடிக்கை
தேவஸ்தான விழிப்புணர்வுப் பிரிவு, கிடங்கில் இருந்த சால்வைகளை சேகரித்து, பெங்களூருவில் உள்ள மத்திய பட்டு வாரியத்திற்கு (Central Silk Board) விஞ்ஞான பகுப்பாய்வுக்காக அனுப்பியது. பரிசோதனை முடிவுகளில், ஒப்பந்தத்தின்படி துப்பட்டாக்கள் 20/22 டெனியர் தூய மல்பெரி பட்டு நூலால் செய்யப்படுவதற்கு பதிலாக, முழுவதும் பாலியஸ்டரால் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. விசாரணையில், நகரியை சேர்ந்த VRS Export என்ற ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே இந்த பட்டு துணிகளை விநியோகித்துள்ளது. இந்த நிறுவனமும் அதன் கிளை நிறுவனங்களும் சேர்ந்து தேவஸ்தானத்திற்கு சுமார் ₹54.95 கோடி மதிப்பிலான துணிகளை விநியோகம் செய்துள்ளன. இதையடுத்து, தேவஸ்தான நிர்வாகம் இந்த 'சால்வை ஊழலை' மாநில ஊழல் தடுப்புப் பிரிவுக்கு (ACB) பரிந்துரைத்துள்ளது.