LOADING...
'மகனை தமிழ்நாட்டிற்கு தத்து கொடுத்துவிட்டோம்': விஜய் மீதான விமர்சனங்களுக்கு தந்தை எஸ்.ஏ.சி ஆவேச பதில்
விஜய் மீதான விமர்சனங்களுக்கு தந்தை எஸ்.ஏ.சி ஆவேச பதில்

'மகனை தமிழ்நாட்டிற்கு தத்து கொடுத்துவிட்டோம்': விஜய் மீதான விமர்சனங்களுக்கு தந்தை எஸ்.ஏ.சி ஆவேச பதில்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 21, 2026
11:34 am

செய்தி முன்னோட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் களத்தில் இறங்கியுள்ள தனது மகன் விஜய் மீதான தனிப்பட்டத் தாக்குதல்களுக்கு, பிரபல இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் (SAC) மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய விஜய்யின் பயணத்தைத் தடுக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் இத்தகைய கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். விஜய்யின் குடும்ப வாழ்க்கை மற்றும் விவாகரத்து போன்ற தனிப்பட்ட விஷயங்களை அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சிகள் பொதுவெளியில் இழுப்பதாக எஸ்.ஏ.சி ஆதங்கம் தெரிவித்துள்ளார். "விஜய் பெண்களுக்கு எதிரானவர் அல்லது பெற்றோருக்கு எதிரானவர் என்ற பிம்பத்தை உருவாக்க திட்டமிட்ட சதி நடக்கிறது. உண்மையில், எப்போதோ பேசி தீர்க்கப்பட்ட குடும்ப விஷயங்களை இப்போது கிளறுவதன் நோக்கம் என்ன?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரச்சார நேரம்

'6 மணி' சர்ச்சை: கரூரில் நடந்த பாடம்

"எனது மகனை தமிழ்நாட்டு மக்களுக்காகத் தத்துக் கொடுத்துவிட்டோம்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட அவர், இத்தகைய அவதூறுகளால் விஜய்யின் மன உறுதியை ஒருபோதும் குலைக்க முடியாது என்றும் SAC கூறினார். தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜய் மாலை 6 மணிக்கே தனது பயணத்தை முடித்துக் கொள்வதை பலரும் கிண்டல் செய்வதை கண்டித்து அதற்கான காரணத்தை எஸ்.ஏ.சி விளக்கியுள்ளார். முன்னதாக கரூரில் நடந்த ஒரு துயரச் சம்பவமே விஜய்யை இந்த முடிவை எடுக்க வைத்ததாக அவர் கூறினார். இருட்டில் தான் தவறுகள் நடக்க வாய்ப்புள்ளதை உணர்ந்த விஜய், மக்களின் பாதுகாப்பைக் கருதி இரவில் பிரச்சாரம் செய்வதைத் தவிர்க்கிறார். ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் கொள்கையில் சமரசம் செய்யாத குணம் விஜய்க்கு உண்டு என்பதை அவர் தெளிவுபடுத்தினார்

ஜனநாயகன்

ஜனநாயகன் படத்திற்கு எதிரான சதிவலை

விஜய்யின் கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்' வெளியாவதில் நீடிக்கும் சிக்கல்கள் மற்றும் இணையத்தில் படம் கசிந்தது தொடர்பாக எஸ்.ஏ.சி அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். இந்தப் படம் தடையின்றி திரைக்கு வந்தால்தான் அது அதிசயம் என்று குறிப்பிட்ட அவர், படத்தின் வெளியீட்டைத் தடுப்பதும், ஆன்லைனில் கசியவிட்டதும் அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல்கள் என்றார். படம் கசிந்த விவகாரத்தில் ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விஜய்யின் அரசியல் வளர்ச்சியை முடக்க சினிமாத் துறையையும் ஒரு கருவியாக எதிர்க்கட்சிகள் பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார். எதிர்ப்புகள் எத்தனை வந்தாலும் விஜய் தனது இலக்கில் உறுதியாக இருப்பதாகவும், அவர் எதற்கும் அஞ்சமாட்டார் என்றும் எஸ்.ஏ. சந்திரசேகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement