தமிழக துறைமுகங்களில் 1ம்.,எண் புயல் எச்சரிக்கை கூண்டு-வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு மற்றும் வட-மேற்கு பகுதியினை நோக்கி நகர்ந்து இன்று(நவ.,15)மத்திய மேற்கு-வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது என்று வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த தாழ்வு மண்டலமானது விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 510கிமீ.,தொலைவில் தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது என்று தெரிகிறது. இதன் காரணமாக மணிக்கு 70கிமீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத்தொடர்ந்து சென்னை, எண்ணூர், தூத்துக்குடி, நாகை, காட்டுப்பள்ளி, பாம்பன், புதுச்சேரி, கடலூர், காரைக்கால் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மீனவர்கள் மற்றும் கப்பல்களின் பாதுகாப்பு கருதி ஏற்றப்பட்டுள்ளது
மீனவர்கள் மற்றும் கடலில் பயணிக்கும் அல்லது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கப்பலின் பாதுகாப்புகளை கருத்தில் கொண்டு இக்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் புயல் உருவாகக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை அவர்கள் அறிந்துகொள்ளமுடியும். மேலும் தற்பொழுது நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று நாளை(நவ.,16)வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா கடலோர பகுதிகளையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுவுற்று வடக்கு-வடகிழக்கு திசையோரம் திரும்பி வரும் 17ம்.,தேதி ஒரிசா கடலோர வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இதனிடையே, தற்போது நிலவும் தாழ்வு மண்டலம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.