இன்று முதல் மிக்ஜாம் புயல் நிவாரண நிதி விநியோகம், டோக்கன் கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இன்று முதல் ₹6,000 நிவாரண நிதி வழங்கும் பணியை, முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார். வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல், வடகடலோர மாவட்டங்களுக்கு வரலாறு காணாத மழைப்பொழிவை தந்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக கனமழையால் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உடமைகளை இழந்தனர். இந்நிலையில், வீடு மற்றும் உடமைகளை இழந்தவர்களுக்கு ₹6,000 நிவாரண நிதி ஒரு வாரத்திற்குள் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். முன்னதாக நிவாரணத் தொகை வழங்குவதற்கு ஏதுவாக வீடு வீடாக டோக்கன்கள் வழங்கப்பட்டது. டோக்கன்களில் குறிப்பிட்டுள்ள தேதியில், நியாய விலை கடையில் நிவாரண நிதியை மக்கள் பெற்று கொள்ளலாம்.
குடும்ப அட்டை இல்லாதவர்கள் நிவாரணம் பெறுவது எப்படி?
நிவாரண நிதி வழங்கும் பணியை சென்னை வேளச்சேரி பகுதியில் உள்ள அஷ்டலட்சுமி நகரில் உள்ள நியாய விலை கடையில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். குடும்ப அட்டைகள் உள்ளவர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் நிலையில், குடும்ப அட்டைகள் இல்லாதவர்களுக்கும் நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதனைத் தொடர்ந்து, குடும்ப அட்டை இல்லாதவர்களும் நிவாரண நிதி பெற தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது, அதன்படி, நியாய விலை கடைகளில் வழங்கப்படும் பிரத்யேக படிவத்தை பூர்த்தி செய்து வழங்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
நிவாரண நிதி குறித்த சந்தேகங்களை தீர்க்க கட்டுப்பாட்டு அறை
இன்று தொடங்கும் நிவாரண நிதி வழங்கும் பணி அடுத்தடுத்த நாட்களில், காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல்- மாலை 5 மணி வரையும் நடைபெற உள்ளது. நிவாரண நிதி குறித்த சந்தேகங்களை தீர்க்கவும், புகார்களை உடனுக்குடன் தீர்க்கவும், எழிலகத்தில் காலை 8:00 மணி முதல் இரவு 8 மணி வரை கட்டுப்பாட்டு அறை செயல்பட உள்ளது. பொதுமக்கள் 044-2859-2828, 1100 ஆகிய கட்டணம் இல்லா தொலைபேசி எண்கள் வாயிலாக, புகார் மற்றும் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்.