
கடலூரில் என்.எல்.சி. நிறுவனத்தை எதிர்த்து பாமக முழு அடைப்பு போராட்டம் - 7,000 போலீசார் குவிப்பு
செய்தி முன்னோட்டம்
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக சுற்றுவட்டார கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி 2000 முதல் 2006ம் ஆண்டு வரை நடந்தது.
தற்போது அதே கிராமங்களில் கூடுதல் இழப்பீடு வழங்குவதாக கூறி மேலும் சில நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
இதனால் முன்னதாக நிலம் வழங்கிய மக்கள் தங்களுக்கும் கூடுதல் இழப்பீடு, வீட்டில் ஒருவருக்கு நிரந்தர பணி உள்ளிட்டவை வழங்க வேண்டும் என கூறி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் வளைமாதேவி பகுதியில் 2006ல் கையகப்படுத்திய நிலத்தை சமன்படுத்தும் பணியில் என்.எல்.சி. நிர்வாகம் எதிர்ப்பினை மீறி நேற்று(மார்ச்.,11) ஈடுபட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக'வினர் போராட்டம் நடத்த முயற்சித்த நிலையில் போலீசார் அவர்களை கைது செய்தனர்.
மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை
கடைகளை மூட சொல்லி வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை
இதனையடுத்து விவசாய நிலத்தினை கட்டுப்பாட்டில் எடுக்க என்.எல்.சி. நிர்வாகம் துடிப்பது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியதோடு முழு அடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
எனினும் இன்று கடலூரில் வழக்கமான நிலையே நிலவுகிறது, 100 சதவீத அரசு பேருந்துகள் இயங்குகிறது, 50 சதவீத தனியார் பேருந்துகளும் இயங்கி வருகிறது.
கடலூரிலிருந்து புதுச்சேரிக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து வியாபாரிகள் கடைகளை திறக்கலாம், யாரேனும் மூட சொல்லி வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி. தெரிவித்துள்ளார்.
முழுஅடைப்பு போராட்டத்தின் அழைப்பினையொட்டி, வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் 7000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாமக'வினர் 40 பேரை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.