நாகை கடலில் கலந்த கச்சா எண்ணெய் - செத்து மிதக்கும் மீன்கள்
நாகை மாவட்டம் பட்டினசேரி மீனவ கிராமத்தில் சென்னை பெட்ரோலிய கழகத்திற்கு சொந்தமான குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கடலில் கலந்துள்ளது. இதன் காரணமாக கடற்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் போன்ற உபாதைகளால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் கடலில் உள்ள மீன்களும் செத்து மிதப்பதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் குழாய் உடைப்பினை சரிசெய்ய முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு திரண்ட அப்பகுதி மீனவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி குழாயை முழுமையாக அகற்ற வேண்டுமென கூறி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
கடல் சீற்றத்தால் பிரித்தெடுக்கும் பணி தொய்வு
முன்னதாக பட்டினசேரியில் மீனவ பஞ்சாயத்து தாரர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாயை நிரந்தரமாக அகற்ற வலியுறுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து மீனவர்கள் நேற்று(மார்ச்3) முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குழாயில் ஏற்பட்ட உடைப்பினை சீரமைக்க ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு கச்சா எண்ணெய் படிய வைத்து பிரித்தெடுக்கும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே கடல் சீற்றம் காரணமாக பிரித்தெடுக்கும் பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில், மீண்டும் நள்ளிரவில் இப்பணி துவங்கியது என்று செய்திகள் தெரிவிக்கிறது.