வீடு கட்ட தோண்டிய பள்ளத்திலிருந்து பல கோடி மதிக்கத்தக்க ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு
கடலூர்-காட்டுமான்னார்கோயில் அருகில் உள்ள திருநாரையூர் என்னும் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பொல்லா பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் அருகில் வசித்து வரும் உத்ராபதி என்பவர் வீடு கட்டுவதற்காக பள்ளம் ஒன்றினை நேற்று(ஆகஸ்ட்.,27)ஆட்களை கொண்டு தோண்டியுள்ளார். அப்போது பள்ளத்துக்குள் ஏதோ இருப்பது போல தென்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து பதமாக அப்பகுதியினை தோண்டி பார்த்ததில் 10 அடி ஆழத்தில் 6 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த சிலைகளை உத்ராபதி பத்திரமாக தனது வீட்டில் வைத்துக்கொண்ட நிலையில், இது குறித்த தகவல் அப்பகுதி முழுவதும் பரவ துவங்கியதையடுத்து, கடலூர் மாவட்ட எஸ்.பி.ராஜாராம், ஏ.எஸ்.பி.ரகுபதி, தாசில்தார் தமிழ்ச்செல்வன் தலைமையிலான வருவாய்த்துறையினர், சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி. ரூபன்குமார் உள்ளிட்டோர் அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர் என்று கூறப்படுகிறது.
ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டும் பணி தீவிரம்
அதன்படி உத்ராபதி வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஆடிப்பூர அம்மன், சிவன், பார்வதி, போகசக்தி அம்மன், பீடத்துடன் பஞ்சமூர்த்தி, இடம்புரி விநாயகர் உள்ளிட்ட சிலைகளை பார்வையிட்டுள்ளனர். பின்னர், சிலைகள் எடுக்கப்பட்ட பகுதியில் ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டும் பணியினை அதிகாரிகள் தீவிரப்படுத்தினர். அவர்கள் மேற்கொண்ட முயற்சியில் நடன சம்மந்தர், சண்டீகேஸ்வரர், நடராஜர் உள்ளிட்ட சில சிலைகள் பீடத்துடன் கிடைத்துள்ளது. மேலும் இதுகுறித்து இந்து அறநிலையத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதன்பேரில், செயல் அலுவலர் வேல்விழி, வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் ரவி உள்ளிட்டோரும் பள்ளம் தோண்டும் பணியினை தொடர்ந்து நேரில் கண்காணித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்டுள்ள சிலைகள் அனைத்தும் ஐம்பொன்னால் செய்யப்பட்ட பல கோடி மதிக்கத்தக்க சிலைகள் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியது குறிப்பிடத்தக்கது.