இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு - மாநில அரசுகள் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
இந்தியாவில் அண்மைகாலமாக கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது என்று தினசரி செய்திகள் வெளியாகி வருகிறது. அதன்படி, அந்தந்த மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு, மக்களையும் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஃப்ளூ பாதிப்பு, சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் காணப்பட்டால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று டெல்லி அரசு கேட்டுக்கொண்டுள்ளது. டெல்லியை தொடர்ந்து ஹரியானா அரசு பொது மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. அதே போல் ஹரியானா வருவோருக்கு தொற்று அறிகுறி காணப்பட்டால் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என்று கூறியுள்ளது.
பொது இடங்களில் முக கவசம் கட்டாயம்
இதனை தொடர்ந்து மும்பையில் மருத்துவமனைகளுக்கு வரும் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்றும், குறிப்பாக 60 வயதிற்கு மேற்பட்டோர் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் மாநகராட்சி உத்தரவினை பிறப்பித்துள்ளது. இந்தியாவிலேயே கேரளாவில் அதிகளவில் கொரோனா பாதிப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கேரள அரசு நாள்பட்ட நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் ஆகியோர் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியிலும் பொது மக்கள் பொது இடங்களில் முக கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.