சொத்துப் பங்கீடு தொடர்பான சாம் பிட்ரோடாவின் கருத்து: காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?
இந்தியாவில்,"அமெரிக்கா போன்ற பரம்பரை வரிச் சட்டம் வேண்டும்" என வாதிட்ட இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடாவின் கருத்துக்களில் இருந்து காங்கிரஸ் விலகி உள்ளது. ஆட்சிக்கு வந்தால், "ஊடுருவுபவர்களுக்கு" செல்வத்தை மறுபங்கீடு செய்வதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வாக்குறுதியளிக்கிறது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு பின்னர் பிட்ரோடாவின் கருத்துக்கள் வந்துள்ளன. பிட்ரோடாவின் கருத்துகளுக்குப் பிறகு, அவரது கருத்துக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என்று காங்கிரஸ் தெளிவுபடுத்தியது. குடிமக்களின் சொத்துக்களைக் கைப்பற்றி அவற்றை "ஊடுருவுபவர்கள்" மற்றும் "அதிக குழந்தைகளுடன்" இருப்பவர்களுக்கு விநியோகிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியதைத் தொடர்ந்து இந்த சலசலப்பு தொடங்கியது.எனினும் செல்வ மறுபகிர்வு திட்டம் பற்றி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை எதுவும் குறிப்பிடப்படவில்லை.
கட்சிக்கும் இவரின் கருத்திற்கும் சம்மந்தம் இல்லை என விலகிய காங்கிரஸ்
சமீபத்தில், ANIக்கு அளித்த பேட்டியில், பிட்ரோடா செல்வ மறுபகிர்வுக்கான கொள்கையின் அவசியத்தை வலியுறுத்தினார். "அமெரிக்காவில், ஒரு பரம்பரை வரி உள்ளது. ஒருவரிடம் $100 மில்லியன் மதிப்புள்ள சொத்து இருந்தால், அவர் இறக்கும்போது அவர் தனது குழந்தைகளுக்கு 45% மட்டுமே மாற்ற முடியும், 55% அரசாங்கத்தால் கைப்பற்றப்படுகிறது." "இந்தியாவில் அது இல்லை. 10 பில்லியன் மதிப்புள்ள ஒருவர் இறந்துவிட்டால், அவரது குழந்தைகளுக்கு 10 பில்லியன் கிடைக்கும், பொதுமக்களுக்கு எதுவும் கிடைக்காது," என்று கூறினார். தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிட்ரோடாவின் கருத்துகளைப் காங்கிரஸிற்கு எதிரான ஆயுதமாக பாஜக பயன்படுத்த துவங்கி விட்டது. மறுபுறம் பிட்ரோடா, தனது கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து, அவை கட்சிக் கொள்கையுடனும் தொடர்பில்லை என்று கூறினார்.