ராகுல் காந்திக்கு எதிராக விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு - காங்கிரஸ்
கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடக மாநில கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து பேசியிருந்தார். எப்படி அனைத்து திருடர்களும் 'மோடி' என்னும் பெயரினை பொதுவாக வைத்துள்ளார்கள் என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் பாஜக எம்எல்ஏ புனரேஷ் மோடி அவமதிப்பு வழக்கினை பதிவு செய்திருந்தார். இதன் தீர்ப்பு நேற்று(மார்ச்.,23) குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது. அதன்படி ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 30 நாட்களுக்குள் தீர்ப்புக்கு எதிராக ராகுல் காந்தி மேல்முறையீடு செய்யலாம் என்றும் சூரத் நீதிமன்றம் அறிவித்திருந்தது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே மேல்முறையீடு செய்வதாக தகவல்
இதற்கிடையே ராகுல்காந்திக்கு எதிராக தீர்ப்பு வந்தநிலையில் காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆங்காங்கே பதற்றமான சூழல் நிலவியது. அந்தவகையில் சென்னை வருவதற்காக கும்பகோணத்தில் காங்கிரஸ் கமிட்டித்தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று கும்பகோண ரயில்நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தார். அப்போது இந்த தீர்ப்பு குறித்து அறிந்த அவர் உடனே ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இவ்வாறாக நாடுமுழுவதும் இந்த தீர்ப்பு விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்யபோவதாக காங்கிரஸ் தற்போது அறிவித்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே, மோடி அரசு அமலாக்கத்துறை இயக்குனரகம், போலீசை அனுப்புகிறது. அரசியல் தரப்பு பேச்சுக்கள் குறித்து வழக்குகளை போடுகிறது. நாங்கள் மேல் கோர்ட்டில் மேல்முறையீடுசெய்து பார்த்துக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.