அரசு விரைவு பேருந்துகளை சாலையோர உணவகங்களில் நிறுத்துவதற்கான நிபந்தனைகள்
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து பேருந்துகளை சாலையோர உணவகங்களில் நிறுத்துவதற்கான உரிமத்தை பெற சில நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் வருமாறு, உணவகத்தில் பயணிகள் அருந்துவதற்கு கொடுக்கப்படும் குடிநீர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீராக இருக்க வேண்டும். கழிவறையினை உபயோகிக்க பயணிகளிடமிருந்து ரூ.5 வரை வசூலிக்கலாம். சாலையோர உணவகத்தில் பரிமாறப்படும் உணவுகள் அனைத்தும் தரமிக்கதாகவும், சுவையானதாகவும் இருத்தல் அவசியம். குறிப்பிட்ட உணவகங்களில் விற்கப்படும் உணவுகளின் பட்டியல் மற்றும் அதன் விலை விவரங்கள் அனைத்தும் அடங்கிய பட்டியல் பலகை பயணிகள் பார்வையில் படும்படி வைத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கணினி மூலமான ரசீது வழங்க அறிவுறுத்தல்
மேலும், உணவகங்களில் விற்கப்படும் உணவு பொருட்கள் அனைத்தும் நியாயமான விலையில் எம்.ஆர்.பி. விலைக்கு மேல் அதிகப்படியாக இல்லாமல் இருத்தல் வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதே போல் உணவகங்களில் அருந்திவிட்டு கட்டணம் செலுத்தும் பயணிகளுக்கு அதற்கான கணினி மூலமான ரசீது (Computarised Bill) கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மேற்கூறிய நிபந்தனைகளின் அடிப்படையில் உரிமம் பெறும் உணவகங்களில் உணவின் தரம், விலை, கஸ்டமர் சேவை, உட்புற பராமரிப்பு, கழிவறை, சுகாதாரம், சுவை உள்ளிட்டவைகளுக்கு மதிப்பீடு (Rating) கொடுக்கப்படுமாம். அவ்வாறு மதிப்பீடு கொடுக்கப்படும் நிலையில் 5க்கு 2 மதிப்பெண்களுக்கு குறைவாக மதிப்பீடு பெற்றால், அந்த உணவகத்தின் ஒப்பந்தமானது உடனே ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.