சென்னை மாநகரின் 4 இடங்களில் பிரம்மாண்ட வாகன நிறுத்தம் அமைக்க முடிவு
சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டமானது நேற்று(ஜூன்.,30)மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடந்தது. இக்கூட்டத்தில் துணைமேயர், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். அப்போது இக்கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, சென்னையில் மாநகராட்சி சார்பில் கோடம்பாக்கம் மண்டலஅலுவலகம், தியாகராயநகர் டாக்டர்.நாயர் சாலை பழைய வணிக வளாகம், ராஜா அண்ணாமலைபுரம் வணிக வளாகம் மற்றும் சி.பி.ராமசாமி சாலை வணிக வளாகம் உள்ளிட்ட 4 இடங்களில் ரூ.162கோடி செலவில் ஒருங்கிணைந்த வாகனநிறுத்தத்தினை அமைப்பது குறித்து மாநிலஅரசிடம் கோர மன்றக்கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.300கோடியில் பிராட்வே பேருந்துநிலையத்தினை பல வணிகவளாகங்களை கொண்ட போக்குவரத்து முனையமாக மாற்றவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சென்னை குடிநீர்வாரியத்திடம் சென்னையின் பராமரிப்பிலுள்ள 53 அம்மா குடிநீர்நிலையங்களை வழங்கவும் ஒப்புதல் கிடைத்துள்ளது.
பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி கொடுக்கும் ஆசிரியர்களுக்கு கல்வி சுற்றுலா
மேலும், மாநகராட்சி பள்ளிகளில் காலியாக உள்ள 1240 காலி பணியிடங்களில் ஒப்பந்த ஆசிரியர்களை நியமிக்கவும் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதே போல் மாநகராட்சி பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி கொடுக்கும் ஆசிரியர்களை கல்வி சுற்றுலா அழைத்து செல்வதோடு, அவர்களது ஊக்கத்தொகை ரூ.1,500ல் இருந்து ரூ.3,000ஆக உயர்த்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பள்ளிகளில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளை சென்னை எண்ணூர் துறைமுகம், ஆவின், அண்ணா நூற்றாண்டு நூலகம், பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அழைத்துச்செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு நினைவாக சிலை அமைத்தல், மாநில கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமரான வி.பி.சிங் சிலை உள்ளிட்டவைகளை அமைக்கவும் இந்த கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.