'சர்வர்' முடக்கம் காரணமாக தபால் நிலைய சேவைகள் நிறுத்தம் - திண்டாடும் பொதுமக்கள்
ஏழை எளிய மக்கள் சிறியளவிலான தொகையை தபால் நிலையங்களில் சேமிக்க முடியும் என்பதால், நகரத்தை விட கிராமங்களில் உள்ள மக்களுக்கும் தபால் நிலையத்திற்கும் உள்ள உறவு காலகாலமாக நீடித்து வருகிறது. இந்தியாவில் 1 லட்சத்து 55 ஆயிரம் தபால்நிலையங்கள் உள்ளன. இவற்றை கணினிவாயிலாக ஒருங்கிணைக்கவும், இணையத்தள சேவையை மேம்படுத்தும் வகையிலும் அஞ்சல் துறைக்கான மென்பொருள் உருவாக்கப்பட்டு, தற்போது உபயோகத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில், தபால் நிலையங்களில் உள்ள கணினிகளை இணைக்கும் 'சர்வர்' அடிக்கடி செயலிழந்து விடுவதால் தபால்நிலைய பயனாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இதுகுறித்து பெரிய நாயக்கப் பாளைய மக்கள் கூறுகையில், "சர்வர் வேலை செய்யாததால் விரைவு தபால்களை அனுப்புவது மட்டுமின்றி, சேமிப்பு கணக்குகளில் பணம் செலுத்த முடியவில்லை" என்று வருத்தம் தெரிவிக்கிறார்கள்.
கோவையில் அடிக்கடி ஏற்படும் 'சர்வர்' முடக்கம்
மேலும் இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கடந்த இரண்டு நாட்களாக கோவையில் உள்ள 80க்கும் மேற்பட்ட துணை தபால்நிலையங்கள் மற்றும் தலைமை தபால்நிலையங்களை இணைக்கும் சர்வர் செயலிழந்ததால் அனைத்து சேவைகளும் முடங்கி உள்ளது. இதனால் ஸ்பீடுபோஸ்ட், மணியார்டர் அனுப்ப முடியவில்லை என்பதோடு, இதில் கணக்கு வைத்துள்ள மக்கள் பணம் எடுக்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சர்வர் பிரச்சனை என்றாவது ஒருநாள் என்றால் கூட பொறுத்துக்கொள்ளலாம், ஆனால் மாதத்திற்கு ஐந்து முறையாவது இந்த சர்வர் பிரச்சனை ஏற்படுகிறது என்றும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து, இந்த சர்வர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வினை தபால்நிலையம் மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள். கோவையில் கடந்த இருநாட்களாக நிலவிய இந்த சர்வர் பிரச்சனை நேற்று சரிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.