
கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்-3 மாநிலங்கள் உள்பட 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ.அதிரடி சோதனை
செய்தி முன்னோட்டம்
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு, கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதியன்று கார் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று நடந்தது.
இதில் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினருக்கு சம்பந்தம் உள்ளதாக தெரியவந்த நிலையில் அந்த அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த ஜமேஷா முபின் என்பவர் அந்த சம்பவத்தில் உயிரிழந்தார்.
இந்த வழக்கு முதலில் தமிழ்நாடு காவல்துறை விசாரணை நடத்திய நிலையில், சிபிசிஐடி'க்கு மாற்றப்பட்ட பின்னர் இறுதியாக என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதனைதொடர்ந்து அந்த இயக்கத்திற்கு சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை செய்யப்பட்டு பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், விசாரணையில் வெடிமருந்துகள், உபகரணங்களை ஆன்லைன் மூலம் வாங்கி இந்த தற்கொலை தாக்குதல் நடத்தி, மத வழிபாட்டுத்தளங்களை சேதப்படுத்தி பிரச்சனையை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதும் தெரியவந்தது.
தீவிர தேடல்
சென்னையில் மண்ணடி, கொடுங்கையூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை
மேலும் இதில் தொடர்புடைய 11 பேரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தற்போது தீவிர தேடலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 3 மாநிலங்களில் உள்ள 60க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று(பிப்.,15) சோதனை நடக்கிறது.
தமிழகத்தில் சென்னையில் மண்ணடி, கொடுங்கையூர் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
அதே போல் மயிலாடுதுறை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல இடங்களில் தீவிர சோதனை நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.