LOADING...
"அன்று கடைசி வரிசை.. இன்று தமிழ்நாட்டின் சிம்மாசனம்!" நேரு ஸ்டேடியத்தில் விஜய் படைக்கும் வரலாறு; 2013ல் நடந்தது என்ன?
நேரு ஸ்டேடியத்தில் விஜய் படைக்கும் வரலாறு

"அன்று கடைசி வரிசை.. இன்று தமிழ்நாட்டின் சிம்மாசனம்!" நேரு ஸ்டேடியத்தில் விஜய் படைக்கும் வரலாறு; 2013ல் நடந்தது என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
May 10, 2026
09:12 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் இன்று அரியணை ஏறுகிறார். சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் மற்றும் விசிக போன்ற கட்சிகளின் வெளி ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் விஜய்க்கு, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். தவெக தொண்டர்கள் இந்தத் தருணத்தைக் கோலாகலமாகக் கொண்டாடினாலும், இதே நேரு மைதானத்தில் சரியாக 13 ஆண்டுகளுக்கு முன்பு விஜய்க்கு இழைக்கப்பட்ட அந்த அவமரியாதைதான் இன்று பலரது நினைவுகளில் ஒரு 'மாஸ்' வரலாற்றுத் திருப்பமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அன்று அநீதி இழைக்கப்பட்ட அதே இடத்தில் இன்று அதிகாரம் கைகூடி வந்திருப்பது காலத்தின் விசித்திரமான கணக்கு என்றுதான் சொல்ல வேண்டும்.

பின்னணி

நேரு உள்விளையாட்டரங்கில் விஜய்க்கு இழைக்கப்பட்ட அந்த ஆறாத வடு

கடந்த 2013 ஆம் ஆண்டு இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற அந்த விழாவில், திரையுலகின் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்த விஜய்க்கு முதல் வரிசையிலோ அல்லது முன் வரிசையிலோ இடம் ஒதுக்கப்படாமல், கடைசி வரிசையில் அமர வைக்கப்பட்டார். ஒரு முன்னணி நடிகரைத் திட்டமிட்டு அவமரியாதை செய்த அந்தச் செயல், அங்கிருந்த ஒட்டுமொத்த சினிமா பிரபலங்களையும் ரசிகர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விஜயின் முகத்தில் அந்தத் தர்மசங்கடம் தெரிந்தாலும், எதுவும் பேசாமல் அவர் அமர்ந்திருந்த போது, நடிகர் விக்ரம் மட்டும் அவருக்கு அருகே சென்று அமர்ந்து தனது ஆதரவை வெளிப்படுத்தியது ஒரு நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.

தலைவா பட பிரச்சினை

தலைவா' படப் பிரச்சனையும் "Time To Lead" ஏற்படுத்திய அரசியல் அதிர்வுகளும்

விஜய்க்கு இழைக்கப்பட்ட அந்த அவமரியாதைக்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய அரசியல் பின்னணி இருந்தது. அவர் நடித்த 'தலைவா' படத்தின் தலைப்பிற்கு கீழே "Time To Lead" (தலைமை தாங்க வேண்டிய நேரம் இது) என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவைக் கடும் கோபத்திற்கு உள்ளாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இந்த வாசகம் நீக்கப்படாவிட்டால் படம் வெளியாகாது என்ற நெருக்கடி உருவானதுடன், மற்ற மாநிலங்களில் வெளியான 10 நாட்களுக்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் படம் வெளியானது. இந்தச் சிக்கலைத் தீர்க்க கோடநாடு வரை சென்று முதலமைச்சரைச் சந்திக்க முயன்றும் விஜய்க்கு அனுமதி மறுக்கப்பட்டதும், பின்னர் அவர் ஒரு உருக்கமான வீடியோ வெளியிட்டதும் விஜய்யின் அரசியல் கனவிற்கான முதல் விதையாக அமைந்தது.

Advertisement

மாபெரும் அங்கீகாரம்

அன்று அவமரியாதை செய்த அதே இடத்தில் இன்று அரங்கேறும் மாபெரும் அங்கீகாரம்

காலம் இன்று ஒரு முழு வட்டத்தைச் சுழன்று வந்துள்ளது. எந்த இடத்தில் விஜய் ஒரு சாதாரணக் கலைஞனாகக் கடைசி வரிசையில் அமர வைக்கப்பட்டாரோ, அதே நேரு உள்விளையாட்டரங்கில் இன்று அவர் ஒரு மாநிலத்தின் தலைவராக, முதலமைச்சராகப் பதவியேற்கிறார். கடந்த 13 ஆண்டுகளில் அவர் சந்தித்த ஒவ்வொரு படப் பிரச்சனைகளும், அரசியல் நெருக்கடிகளும் அவரை இன்று ஒரு முழுநேர அரசியல்வாதியாக மாற்றியுள்ளன. அன்று அவருக்கு மறுக்கப்பட்ட அந்த முதல் வரிசை இருக்கை, இன்று ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் வழிநடத்தும் முதலமைச்சர் நாற்காலியாக மாறியிருப்பது ஒரு திரையுலக நாயகன் நிஜ வாழ்வின் நாயகனாக மாறிய வரலாற்றுத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

Advertisement