Loading...
தமிழ்நாடு காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு மெகா அறிவிப்புகள்: 29,000+ புதிய பணியிடங்கள், ₹1 கோடி நிவாரணம்
தமிழ்நாடு காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு பல முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்

தமிழ்நாடு காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு மெகா அறிவிப்புகள்: 29,000+ புதிய பணியிடங்கள், ₹1 கோடி நிவாரணம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 03, 2026
02:09 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, பல்வேறு முக்கிய புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தனது துறையின் கீழ் பல முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார். அறிவிப்பில் முக்கியமாக மாநிலத்தில் உள்ள காவல் நிலையங்களின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில், அடுத்த 5 ஆண்டுகளில் 29,108 கூடுதல் காவலர் பணியிடங்கள் படிப்படியாக உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, தமிழ்நாடு காவல்துறையில் நடப்பாண்டில் 5,000 பெண் காவலர்கள் உட்பட மொத்தம் 10,000 புதிய காவலர்கள் நியமிக்கப்படுவார்கள், தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் சுமார் ₹23 கோடி செலவில் உள் மற்றும் வெளிப்பறப் பயிற்சிக்கான பல்நோக்கு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

நிவாரணம்

காவல்துறைக்கான முக்கிய அறிவிப்புகள்

பணியின் போது துணிச்சலுடன் செயல்பட்டு உயிரிழைக்கும் காவலர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீடு ₹1 கோடியாக உயர்த்தப்படும்.

பணிக்காலத்தில் இயற்கையாகவோ அல்லது விபத்திலோ இறக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கான கருணைத் தொகை ₹20 லட்சத்திலிருந்து ₹30 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

செயற்கை நுண்ணறிவு(AI), நவீன டிஜிட்டல் தடயவியல், நிகழ்நேரக் கண்காணிப்பு மற்றும் நவீன கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்க ₹212 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் 50 கிராமங்களை தேர்வு செய்து, தலா ₹10 லட்சம் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

காவல்துறையின் ரோந்து மற்றும் அவசரப் பணிகளுக்காக ₹200 கோடி செலவில் புதிய வாகனங்கள் வாங்கப்படும்.

மேலும் சேலம் மற்றும் விழுப்புரத்தில் ₹14 கோடி செலவில் புதிய DNA பிரிவுகள் தொடங்கப்படும்.

தீயணைப்பு துறை

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அறிவிப்புகள்

பொதுமக்கள் அவசரத் தேவைகளுக்காக 6 புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் ₹16 கோடி செலவில் நிறுவப்படும்.

தீயணைப்புத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்காக 10 இடங்களில் ₹80 கோடி செலவில் 131 புதிய குடியிருப்புகள் கட்டப்படும்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் பயிற்சி அகாடமியின் இரண்டாம் கட்டப் பணிகள் ₹50 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும்.

காவலர்களின் நலன், நவீனத் தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் புதிய உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்புகள் காவல்துறை வட்டாரத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

ADVERTISEMENT