முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு அரசானது தொழில்துறைக்காக வெளிநாடு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய்க்கு சென்றிருந்தப்பொழுதும், தமிழ்நாட்டில் தொழில் துவங்க முன்வருமாறு தொழிலதிபர்களை அழைத்திருந்தார். அதன் அடிப்படையில், தமிழகத்திற்கு ரூ.6,100கோடி முதலீடு மற்றும் 15,100பேருக்கு வேலைவாய்ப்பு ஆகியன கிடைக்கும் வண்ணம் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதன்படி,மீண்டும் முதலீடுகளை ஈர்க்கும் எண்ணத்தோடு மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர்,ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு நாளை(மே.,23)முதல் 8 நாட்கள் சுற்றுப்பயணமாக செல்கிறார். அதன்படி,நாளை சிங்கப்பூரில் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் இவர், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளார். அதனைத்தொடர்ந்து, ஜப்பான் செல்லும் முதல்வர்,ஒசாகா நகரில் நடக்கவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு, முக்கிய நிறுவனங்களின் தலைமைஅதிகாரிகளை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு கோரவுள்ளார் என்று கூறப்படுகிறது.