சென்னை அரசு மருத்துவமனையில் குழந்தையின் கை அகற்றம் - மருத்துவமனை அறிக்கை வெளியீடு
ராமநாதபுரம் மாவட்டத்தினை சேர்ந்த தஸ்தகீர் என்பவரது ஒன்றரை வயது குழந்தைக்கு தலையில் நீர்வழிந்துள்ளது. இதனால் மேல்சிகிச்சையளிக்க தனது குழந்தையினை அவர் சென்னை ராஜிவ்காந்தி அரசுமருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இதனையடுத்து அந்த ஒன்றரை வயது குழந்தையின் கையில் ட்ரிப்ஸ் போடப்பட்டதாக தெரிகிறது. ஆனால் 2 நாட்களுக்கு பின்னர், குழந்தையின் கைக்கருப்பாக மாறியுள்ளது. செவிலியர்களிடம் கேட்கையில், அது ஒன்றும் பிரச்சனையில்லை என்று கூறியுள்ளனர். ஆனால் குழந்தையின் வலதுக்கை அழுகி, முட்டிவரை செயலிழந்ததையடுத்து, கையினை அகற்றவேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். அதன்படி,கடந்த 2-ம்தேதி, எழும்பூர் குழந்தைகள் நலமருத்துவமனையில் அக்குழந்தையின் கை அகற்றப்பட்டது. குழந்தையின் இந்நிலைக்கு, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை செவிலியர்களின் அலட்சியமே காரணம் என்று பெற்றோர்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் மருத்துவ அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
மருந்து கசிவு காரணத்தினால் ரத்தஓட்டம் பாதிக்கப்படவில்லை - மருத்துவர்கள் அறிக்கை
அந்த மருத்துவ அறிக்கையின்படி,'pesudonomas'என்னும் கிருமியால் ஏற்படும் மூளைத்தொற்று காரணமாக, ரத்தநாளங்களில் பாதிப்படைந்து, குழந்தையின் வலதுக்கையில் ரத்தஓட்டம் பாதிக்கப்பட்டது. இந்த ரத்தநாள அடைப்பு மருந்து அல்லது மாற்றுச்சிகிச்சை காரணமாக ஏற்பட்டதில்லை. குழந்தையின் உயிரை காப்பாற்றவே, காலதாமதம் செய்யாமல் உடனே அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டு, கை அகற்றப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளது. மேலும்,"குழந்தையின் வலதுக்கையில் நிறமாற்றம் ஏற்பட்ட உடனே செவிலியர்கள் பரிசோதித்துள்ளார்கள். பின்னர் மருத்துவர் பரிசோதனை செய்து 'த்ரோம்போபிளேபிடிஸ்' என்று கணித்து, அதற்கான சிகிச்சையும் அளித்துள்ளனர். எனினும், ரத்த ஓட்டம் பாதித்த காரணத்தினால், குழந்தையின் கை அகற்றவேண்டியநிலை ஏற்பட்டது" என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வென்பிளான் ஊசியினை தமனியில் போடவில்லை என்று குழந்தையின் பெற்றோர்கள் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், மருந்து கசிவுக்காரணத்தினால் ரத்தஓட்டம் பாதிக்கப்படவில்லை என்று மருத்துவர்கள் தற்போது உறுதிச்செய்துள்ளனர்.