LOADING...
ஃபரிதாபாத் சதித்திட்டம்: மருத்துவர்களைத் தீவிரவாதத்திற்குள் இழுத்த மதகுரு (இமாம்) கைது
காஷ்மீரை சேர்ந்த மதகுரு (இமாம்) இர்ஃபான் அகமது வாகா செவ்வாய்க்கிழமை அன்று கைது செய்யப்பட்டார்

ஃபரிதாபாத் சதித்திட்டம்: மருத்துவர்களைத் தீவிரவாதத்திற்குள் இழுத்த மதகுரு (இமாம்) கைது

எழுதியவர் Venkatalakshmi V
Nov 12, 2025
08:56 am

செய்தி முன்னோட்டம்

டெல்லியை தாக்கும் நோக்குடன் ஃபரிதாபாத்தில் 2,900 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில், மருத்துவர்கள் மற்றும் இளைஞர்களை தீவிரவாத கொள்கைகளுக்குள் ஈர்த்ததாக கருதப்படும் காஷ்மீரை சேர்ந்த ஒரு மதகுரு (இமாம்) கைது செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் பகுதியை சேர்ந்த இமாம் இர்ஃபான் அகமது வாகா செவ்வாய்க்கிழமை அன்று கைது செய்யப்பட்டார். இவர் இதற்கு முன்பு ஸ்ரீநகரில் உள்ள அரசுக் மருத்துவக் கல்லூரியில் துணை மருத்துவ ஊழியராகவும் (paramedical worker), பின்னர் நௌகாமில் இமாமாகவும் பணியாற்றியவர். இர்ஃபான் அகமது வாகாவின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவ நிபுணர்கள் மற்றும் இளைஞர்களை தீவிரமயமாக்குவதில் (radicalising) இவர்கள் ஈடுபட்டதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பயங்கரவாதம்

வெள்ளை காலர் பயங்கரவாதம்

இந்தச் சதித் திட்டத்தை "வெள்ளை காலர் பயங்கரவாதம்" (White-Collar Terrorism) எனப் போலீஸ் குறிப்பிடுகிறது. இதில், ஜெய்ஷ்-இ-முகமது (JeM) மற்றும் அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் (AGuH) ஆகிய பயங்கரவாத அமைப்புகள், மருத்துவர்கள், கல்வியாளர்கள் போன்ற உயர்பதவியில் உள்ளோரை தங்கள் வலையில் சிக்க வைத்துள்ளது. ஃபரிதாபாத் வெடிபொருள் பதுக்கலுக்கு முக்கியக் காரணமாக இருந்த டாக்டர் முஸம்மில் ஷகீலுடன் இமாம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது தெரியவந்துள்ளது. முஸம்மில் வாடகைக்கு எடுத்த அறைகள் இமாமிற்கு சொந்தமானவை என்றும் கூறப்படுகிறது. மேலும், ஜெய்ஷ் அமைப்பின் மகளிர் பிரிவை உருவாக்க உதவியதாக கூறப்படும் டாக்டர் ஷாஹீனை தீவிரமயமாக்குவதில் இமாமின் மனைவிக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சதித்திட்டம்

பல மாநிலங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்த திட்டம்?

கடந்த அக்டோபர் 19 அன்று ஸ்ரீநகரின் நௌகாம் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு சார்பாக ஒட்டப்பட்ட நோட்டீஸ்கள், இவரால் வழங்கப்பட்டவை என்றும் கைதானவர்களிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது. கைதானவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தொலைபேசிகளில், தீவிரவாத நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான அறிவுறுத்தல்கள் இருந்துள்ளன. பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத தலைவரின் குடும்பம் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக, பல மாநிலங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல்களை நடத்த இந்தத் திட்டம் தீட்டப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இமாம் கைது செய்யப்பட்டதன் மூலம் இந்த மாபெரும் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.