அபிஜீத் திப்கேவுக்கு நிபந்தனை ஜாமீன்: கன்னாட் பிளேஸ் போராட்டத்தில் கைதானவர் விடுதலை
செய்தி முன்னோட்டம்
தலைநகர் தில்லியில் உள்ள கன்னாட் பிளேஸ் சென்ட்ரல் பார்க் பகுதியில் 'லெஹ்ரா தோ திரங்கா' (தேசியக் கொடியை ஏந்துவோம்) என்ற பெயரில் போராட்டம் நடத்த முயன்றபோது கைது செய்யப்பட்ட காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) நிறுவனர் அபிஜீத் திப்கேவுக்கு (Abhijeet Dipke), சிறப்பு நிர்வாக மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. புதிய அமைதிப் பத்திரத்தில் (Peace Bond) கையெழுத்திட்டதைத் தொடர்ந்து அவர் காவல் நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்.
தடை உத்தரவு
திடீர் கைது நடவடிக்கை
வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் கூறி தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளும், அமைப்புகளும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
கன்னாட் பிளேஸில் பேரணி நடத்த அழைப்பு விடுத்திருந்த நிலையில், தில்லி முழுவதும் பாரதிய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டம் பிரிவு 163-ன் கீழ் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இதனை மீறி பேரணிக்குச் சென்ற திப்கேவை ஜண்டேவாலான் பகுதியிலும், ஐசா மாணவர் அமைப்பின் தலைவர் நேஹா போராவை மண்டி ஹவுஸ் பகுதியிலும் தில்லி போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்தனர்.
முன்னதாக அக்டோபர் 10 அன்று ஒரு வருடத்திற்கு அமைதி காப்பதாக அளித்த உறுதியை மீறியதாகக் கூறி, திப்கே மீது பி.என்.எஸ்.எஸ் 126 மற்றும் 170 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சட்டவிரோதக் கைது
நீதிமன்றத்தில் வாதமும் எதிர்ப்புக் குரலும்
தேசியக் கொடியை ஏற்றுமாறு நாட்டு மக்களுக்கு அமைதியான முறையில் அழைப்பு விடுத்ததை எப்படிக் குற்றமாகக் கருத முடியும் எனக் கேள்வி எழுப்பிய சி.ஜே.பி கட்சியின் சட்டப்பிரிவு தலைவர் ரத்னா சிங், திப்கேவின் கைதை எதிர்த்து மனுத் தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையில், கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட ஐசா தலைவர் நேஹா போரா, "இந்தக் கைது நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை" என்று தில்லி போலீஸாரையும் மத்திய அரசையும் சாடியதுடன், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தியுள்ளார்.