மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர விமான சேவைக்கு அனுமதி
1962ம் ஆண்டு மதுரை விமான நிலையம் துவங்கப்பட்டு, அதன் பிறகு 2010ம் ஆண்டு புதிய முனையகட்டிடம் திறக்கப்பட்டது. மதுரை விமானநிலையத்தில் 2013ம் ஆண்டு முதல் வெளிநாட்டு விமானசேவை துவங்கப்பட்டு நடந்து வருகிறது. மதுரையில் இருந்து இலங்கை, துபாய், சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளுக்கு மட்டுமே நேரடி விமானசேவை உள்ளது. மதுரை விமானநிலையம் இதுவரை சுங்க விமான நிலையமாகவே செயல்படுகிறது, இதுவரை பன்னாட்டு விமான நிலையமாக நிலை உயர்த்தப்படவில்லை. இங்கு 3சர்வதேச விமான சேவைகள் இருந்தாலும், அதிகளவில் பயணிகளை கையாண்டு வருகிறது. மதுரை விமான நிலையத்தோடு ஒப்பிடுகையில் கோவை, ஷீரடி, விஜயவாடா, கண்ணூர், திருப்பதி ஆகிய விமான நிலையங்கள் குறைந்த அளவிலேயே பயணிகளை கையாண்டாலும், அவை சர்வதேச விமான நிலையங்களாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1ம் தேதி முதல் 24 மணி நேரமும் விமான சேவை - இந்திய விமான நிலைய ஆணையம்
மதுரை விமான நிலையத்தை சர்வதேச நிலையமாக அறிவிக்கவேண்டும் என்று 10ஆண்டுகளாக பல அமைப்புகள் வலியுறுத்தி வருகிறது. சமீபத்தில் கூட, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை விமானநிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜோதிராத்திய சிந்தியாவுக்கு கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், மதுரை விமானநிலையத்தில் பகல் நேரத்தில் மட்டும் விமான சேவைகள் இயங்கி வருகிறது. இதனையடுத்து இரவு நேரங்களிலும் விமானங்கள் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது. இந்த கோரிக்கையினை ஏற்று, 24மணிநேர சேவை தொடங்க விமான போக்குவரத்து துறை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, இந்திய விமானநிலைய ஆணையம் ஏப்ரல்1 முதல் 24 மணிநேரமும் விமானசேவை நடக்கும் என்று அறிவித்துள்ளது.