கோயில் கும்பாபிஷேகத்திற்கு சீர் கொண்டுவந்த கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள்
சென்னை திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையில் உள்ள கே.வி.கே. குப்பம் என்னும் மீனவ கிராமத்தில் மீனவ மக்களின் காவல் தெய்வமாக வழிபடப்படும் படவேட்டம்மன் ஆலையம் ஒன்று சிறிதாக இருந்துள்ளது. இதனை புனரமைக்கும் பணியானது கடந்த 2021ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த திருப்பணியானது திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் தலைமையில் நடைபெற்று தற்போது நிறைவடைந்துள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ படவேட்டம்மன், முருகன், விநாயகர் சன்னதிகள் மிக அருமையாக நவீன முறையில் கட்டப்பட்டுள்ளது. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், மகா கும்பாபிஷேக விழா கடந்த 19ம் தேதி பந்தல் கால் நடும் நிகழ்வு கொண்டு ஆரம்பித்தது.
சிவாச்சாரியார் சதீஷ் தலைமையில் குருக்கள் ஒன்று சேர்ந்து புனிதநீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம்
இதனைதொடர்ந்து ஐந்து யாகசாலைகள் அமைக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து புனிதநீரினை கொண்டு வந்து கலசத்தில் வைத்து கோ பூஜை, கலச பூஜை போன்ற பல பூஜைகள் செய்து வந்தனர். இந்நிலையில் இக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நேற்று(மார்ச்.,27) நடைபெற்றது. மங்கள வாத்தியங்கள் முழங்க கலசங்கள் புறப்பாடாகி, சிவாச்சாரியார் சதீஷ் தலைமையில் குருக்கள் ஒன்று சேர்ந்து படவேட்டம்மன், முருகர், விநாயகர், ராஜ கோபுரம் மற்றும் பஞ்ச கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் செய்தனர். இவ்விழாவில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் சீர்வரிசையோடு ஊர்வலமாக வந்து படவேட்டம்மனுக்கு மரியாதை செய்தனர். இது பக்தர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.