Page Loader
சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் ட்ரிப்ஸ் ஏற்றிய குழந்தையின் கை அகற்றம் 
சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் ட்ரிப்ஸ் ஏற்றிய குழந்தையின் கை அகற்றம்

சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் ட்ரிப்ஸ் ஏற்றிய குழந்தையின் கை அகற்றம் 

எழுதியவர் Nivetha P
Jul 02, 2023
06:01 pm

செய்தி முன்னோட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தினை சேர்ந்த தஸ்தகீர் என்பவரது ஒன்றரை வயது குழந்தைக்கு தலையில் நீர் வழிந்துள்ளது. இதனால், அவர் மேல் சிகிச்சையளிக்க தனது குழந்தையினை சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இதனையடுத்து, அந்த ஒன்றரை வயது குழந்தையின் கையில் ட்ரிப்ஸ் போடப்பட்டதாக தெரிகிறது. அதன் பின்னர், 2 நாட்களுக்கு முன்னர் குழந்தையின் கை கருப்பாக மாறியுள்ளது. ஆனால், செவிலியர்களிடம் கேட்கையில், அது ஒன்றும் பிரச்சனையில்லை என்று கூறி இருக்கின்றனர். ஆனால், குழந்தையின் வலதுக்கை அழுகி முட்டி வரை செயலிழந்ததையடுத்து, கையினை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதனைக்கேட்ட பெற்றோர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். தற்போது அந்த குழந்தை அறுவை சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் 

நிச்சயம் உண்மைத்தன்மை கண்டறியப்படும் என அறிவிப்பு

இந்த சம்பவத்தினையடுத்து, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தால் தான் பச்சிளம் குழந்தையின் கை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது என்று புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில், இது குறித்து அறிந்த அமைச்சர் மா.சுப்ரமணியம், நானும் இதுகுறித்த செய்தி அறிந்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விசாரித்தேன். அதற்கு அவர்கள், குழந்தை குறை பிரசவத்தில் பிறந்துள்ளது. ஏற்கனவே உடலில் பல பிரச்சனைகள் உள்ளது, இதயத்தில் ஓட்டை உள்ளது, அதற்கான சிகிச்சைகளும் அளிக்கப்படவுள்ளது என்று கூறினர். மேலும், ட்ரிப்ஸ் போட்ட விவகாரம் குறித்தும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளோம். மருத்துவர்களோ, செவிலியர்களோ யாரும் பாதிப்பினை ஏற்படுத்த மருத்துவமனைக்கு வருவதில்லை. பாதுகாக்கத்தான் வருகிறார்கள். நிச்சயம் உண்மைத்தன்மை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.