ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று (டிசம்பர் 14) காலை உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் அலுவலகத்தின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனை அடைகிறேன். அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் பேரியக்கத்தின் தோழர்களுக்கும், ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்." என முதல்வர் தெரிவித்துள்ளார். பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.