LOADING...
சத்தீஸ்கர் கோவில் ரோப்வே விபத்து: நவரத்திரி கூட்டத்தில் ஒரு பெண் பலி, 17 பேர் காயம்
சத்தீஸ்கர் கோவில் ரோப்வே விபத்தில் ஒருவர் பலி

சத்தீஸ்கர் கோவில் ரோப்வே விபத்து: நவரத்திரி கூட்டத்தில் ஒரு பெண் பலி, 17 பேர் காயம்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 22, 2026
07:16 pm

செய்தி முன்னோட்டம்

சத்தீஸ்கர் மாநிலம் மகாசமுந்த் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கல்லாரி மாதா கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) நடந்த ரோப்வே விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நவரத்திரி திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்த வேளையில், ரோப்வே கேபிள் திடீரென அறுந்து விழுந்ததில் ஒரு பெண் உயிரிழந்தார் மற்றும் 17 பேர் காயமடைந்தனர். தரைமட்டத்திலிருந்து சுமார் 3,000 அடி உயரத்தில் மலை உச்சியில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. பக்தர்கள் மலையேறுவதற்கு வசதியாக இங்கு ரோப்வே வசதி செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், பாதியிலேயே ரோப்வே கேபிள் திடீரென அறுந்து விழுந்தது. இதனால் கேபின்களில் இருந்த பயணிகள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகினர்.

விவரங்கள்

உயிரிழப்பு மற்றும் சிகிச்சை விவரங்கள்

இந்த விபத்தில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த 17 பேரில் 5 பேர் மேல் சிகிச்சைக்காக ராய்ப்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ராய்ப்பூரில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மற்றவர்கள் உள்ளூர் மருத்துவமனைகளில் முதலுதவி பெற்று வீடு திரும்பியுள்ளனர். நவரத்திரி போன்ற விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வரும் நிலையில், இத்தகைய விபத்து ஏற்பட்டது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. ரோப்வே முறையாகப் பராமரிக்கப்பட்டதா அல்லது அதிகப்படியான பாரம் காரணமாக விபத்து நடந்ததா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவிழாக் காலத்திற்கு முன்னதாகப் பாதுகாப்புத் தணிக்கை செய்யப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Advertisement