அமெரிக்கா, பிரிட்டனை விட சென்னையில் 'மகிழ்ச்சி' அதிகம்: சுவாரஸ்ய ஆய்வறிக்கை!
செய்தி முன்னோட்டம்
"சென்னையில வாழ்றவங்களுக்கு எது உண்மையான மகிழ்ச்சியைத் தருது?" என்ற கேள்விக்கு, பொதுவாக பலரும் மெரினா பீச், தியேட்டர்கள் அல்லது நண்பர்களுடனான அரட்டைகளைத்தான் குறிப்பிடுவார்கள். ஆனால், சமீபத்திய புதிய ஆய்வறிக்கை ஒன்று சென்னை மக்களின் மகிழ்ச்சி குறித்த மிகவும் சுவாரஸ்யமான மற்றும் ஆச்சரியமளிக்கும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது. 'ஜர்னல் ஆஃப் இண்டஸ்ட்ரியல் எக்காலஜி' இதழில் வெளியான இந்த ஆய்வின்படி, சென்னை மக்களின் அன்றாட வாழ்க்கை திருப்தியிலும் மகிழ்ச்சியிலும் சமூக உறவுகளுக்கு (குடும்பம், நண்பர்கள்) எந்தளவுக்குப் பங்குள்ளதோ, அதே அளவு முக்கியப் பங்கு அவர்கள் வாழும் வீடுகளுக்கும், தெருக்களில் உள்ள நடைபாதைகளுக்கும் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
மகிழ்ச்சி புள்ளிகள்
சென்னைவாசிகளின் 'மகிழ்ச்சி புள்ளிகள்'
அர்பன் நெக்ஸஸ் லேப் அமைப்பை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சென்னை மாநகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வசிக்கும் சுமார் 2,400 மக்களிடம் இந்த ஆய்வை மேற்கொண்டனர். மக்களின் வாழ்க்கைத் திருப்தி (Life Satisfaction) மற்றும் அன்றாட மகிழ்ச்சி (Day-to-day Happiness) ஆகியவற்றை 10 புள்ளிகள் அடிப்படையில் கணக்கிட்ட போது கிடைத்த முடிவுகள் இதோ: வாழ்க்கைத் திருப்தி, சென்னையில் 7.13 புள்ளிகள் உள்ளது. இது இந்தியா அளவில் கிடைக்கப்பெற்ற 4.05 புள்ளிகளை விட அதிகம். கூடுதலாக அமெரிக்கா (6.72) மற்றும் ஐக்கிய ராஜ்யத்தை (6.75) விடவும் இது அதிகம். மேலும் சென்னைவாசிகளின் அன்றாட மகிழ்ச்சி புள்ளிகள் 7.62 ஆகவுள்ளது. இது UKவின் 7.45 புள்ளிகளை விட சற்றே அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது.
காரணிகள்
மகிழ்ச்சியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகள்
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, கல்வி, நல்ல வேலை, குடும்ப உறவுகள் மற்றும் நண்பர்கள் வட்டாரத்திற்கு இணையாக, ஒரு நகராட்சியின் உள்கட்டமைப்பும் (Urban Infrastructure) மனிதர்களின் மன மகிழ்ச்சியை நேரடியாகப் பாதிக்கிறது. வீட்டுக்குள்ளே தேவைப்படும் வசதிகளாக, பரந்த மற்றும் காற்றோட்டமான பெரிய வீடுகள், தடையற்ற மின்சார விநியோகம் மற்றும் கோடைகாலத்தை எதிர்கொள்ளத் தேவையான AC வசதிகள் உள்ளிட்டவை கருதப்படுகின்றன. வீட்டுக்கு வெளியே தேவைப்படும் வசதிகளாக, சுத்தமான காற்று மற்றும் அமைதியான சூழல், ஆக்கிரமிப்புகள் இல்லாத, பாதுகாப்பாக நடந்து செல்லக்கூடிய நடைபாதைகள் மற்றும் சைக்கிள் ஓட்டுவதற்கான தனிப்பாதைகள் மற்றும் சிறுவர்கள் விளையாடுவதற்கான பூங்காக்கள் ஆகியவை கருதப்பட்டன.
வாழ்க்கைத் தரம்
உயரும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரம்
குறைந்த வருவாய் பிரிவினரிடையே (மாதம் ரூ.25,000-க்கு கீழ் சம்பாதிப்பவர்கள்) நல்ல வீட்டு வசதியும், தடையற்ற மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற உள்கட்டமைப்புகளும் கிடைக்கும் போது, அவர்களின் மகிழ்ச்சி குறியீடு 10-க்கு 2 புள்ளிகள் வரை அதிரடியாக உயர்வதாக இந்த ஆய்வு கூறுகிறது. 2050-ம் ஆண்டிற்குள் இந்தியாவின் நகர்ப்புற மக்கள் தொகை மேலும் 40 கோடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், வெறும் பொருளாதார வளர்ச்சியை மட்டும் இலக்காகக் கொள்ளாமல், மக்களின் மன மகிழ்ச்சியை அதிகரிக்கும் உள்கட்டமைப்புகளை (பூங்காக்கள், சிறந்த நடைபாதைகள், தரமான வீடுகள்) திட்டமிட்டு உருவாக்க இந்த சென்னை மாதிரி ஆய்வு உலக நாடுகளுக்கே ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையவுள்ளது.