
சென்னை கலாஷேத்ரா பாலியல் விவகாரம் - பேராசிரியர் ஜாமீன் மனுவினை ரத்து செய்த நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
சென்னை திருவான்மியூரில் இயங்கி வரும் கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீ நாத் ஆகியோரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
அதனை தொடர்ந்து கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளிடம் மகளிர் ஆணைய தலைவர் குமாரி நேரில் விசாரணை நடத்தினார்.
இதனையடுத்து மாணவிகள் குறிப்பிட்ட 4 பேர் மீது எழுத்துபூர்வமாக புகார் அளித்த நிலையில், பேராசிரியர் ஹரி பத்மன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மற்ற 3 பேர் தற்காலிக ஆசிரியர்கள் என்பதால் பணி நீக்கம் செய்வதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாலியல் விவகாரம்
நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த ஜாமீன் மனு
இந்த நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் மூடப்பட்டிருந்த கல்லூரி திறக்கப்பட்டு தற்போது தேர்வுகள் நடந்து வருகிறது.
இதற்கிடையே இன்று(ஏப்ரல்.,11) மாநில மனித உரிமைகள் ஆணையம் மாணவ-மாணவியரிடம் விசாரணை நடத்தினர்.
ஆனால் தற்போது தேர்வுகள் நடைபெறுவதால், தேர்வுகள் முடிந்த பின்னர் அடுத்தவாரம் விசாரணையினை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஹரி பத்மன் சார்பில் ஜாமீன் மனுவானது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அந்த ஜாமீன் மனுவினை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.