இ.பி.எஸ்'க்கு எதிராக வழக்கு தொடுத்தவருக்கு ரூ.50,000 அபராதம்-சென்னை உயர்நீதிமன்றம்
கடந்த 2019ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை சிலர் மிரட்டி தவறாக படம் எடுத்து அவர்களை கூட்டு பலாத்காரம் செய்தததாக பெரும் சர்ச்சை கிளம்பியது. இந்த சம்பவத்தின் பொழுது எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழக முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடவேண்டியவை. அந்த பிரச்சனையில் பல அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதையடுத்து, இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்கள் வெளியிடப்பட்டதால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள் என சென்னையை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இது தொடர்பாக அப்போதைய காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் பணி நீக்கம் செய்யப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது தெரியாமல் வழக்கு தொடர்ந்த மனுதாரர்
மேலும், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தலைமைச்செயலாளரிடம் அரசாணையில் பெயர்களை இடம்பெற செய்தது குறித்து விசாரணை நடத்த வேண்டுமென்றும் கடந்த ஆண்டு ஜனவரி 12ம்தேதி தமிழக முதல்வரின் முகவரித்துறையிடம் மனு அளித்ததாக கூறியுள்ளார். அந்த புகார்மனு மீதான நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு பாலசந்தர் மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபொழுது, பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியிட்ட காவல்துறை அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிமீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கும்படி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அதுகுறித்து தெரியாமல் வழக்கு தாக்கல் செய்ததற்காக பாலசந்தருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.