நீலகிரி கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை திட்டத்திற்கு தடை
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 200 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக கோடை விழாவில், தீட்டுக்கல்லில் மே 13முதல் 30ம்தேதி வரை ஹெலிடூரிஸம் என்னும் ஹெலிகாப்டர் சாகச சுற்றுலா நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் மலைப்பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் இயங்கினால் அதிக ஒலிஅலைகளை ஏற்படுத்தி வனவிலங்குகள் மற்றும் பறவைகள் பாதிக்கப்படும் என்று கூறி, இதனால் இதற்கு தடை விதிக்கவேண்டும் என்று சென்னை அண்ணா நகரை சேர்ந்த பேராசிரியர் முருகவேல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். இவ்வழக்கினை இன்று(மே.,17)விசாரித்த நீதிபதிகள், இந்த திட்டத்தினால் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும், இதுபோன்ற வணிகரீதியான திட்டங்களால் பல்லுயிர் பெருக்க மண்டலம் பாதிக்கக்கூடாது என்றும் கூறி ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.