Loading...
மக்களின் எதிர்ப்புக்குப் பணிந்த சென்னை மாநகராட்சி: சொத்து வரி மறுமதிப்பீடு நிறுத்தம்; செலுத்திய பணம் என்னவாகும்?
சுமார் 3.5 லட்சம் சொத்து உரிமையாளர்களுக்குத் திருத்தப்பட்ட புதிய வரி நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன

மக்களின் எதிர்ப்புக்குப் பணிந்த சென்னை மாநகராட்சி: சொத்து வரி மறுமதிப்பீடு நிறுத்தம்; செலுத்திய பணம் என்னவாகும்?

எழுதியவர் Venkatalakshmi V
Aug 14, 2026
07:54 am

செய்தி முன்னோட்டம்

சென்னையில் ட்ரோன் மற்றும் செயற்கைக்கோள் தரவுகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வந்த சொத்துகளுக்கான சொத்துவரி மறுமதிப்பீடு நடவடிக்கையை பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து சென்னை பெருநகர மாநகராட்சி உடனடியாக நிறுத்தி வைத்துள்ளது. சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் GIS மற்றும் ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடுகள், வணிக வளாகங்களின் பரப்பளவைக் கணக்கிட்டு, குறைவாக வரி செலுத்தி வந்ததாக கூறப்பட்ட சுமார் 3.5 லட்சம் சொத்து உரிமையாளர்களுக்குத் திருத்தப்பட்ட புதிய வரி நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், 3 முதல் 4 மடங்கு வரை வரி உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி கடும் கண்டனம் தெரிவித்தனர்.

பின்வாங்கல்

பொதுமக்கள் எதிர்ப்பால் மாநகராட்சி பின்வாங்கல்

இந்த வரி உயர்வு குறித்து எழுந்த புகார்கள் தொடர்பாக மாநகராட்சி மேயர் பிரியாவிடம் கேட்டபோது, "கவுன்சிலர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படாமல், அதிகாரிகளால் தனிச்சையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகளின் ஒப்புதலின்றி வரி மாற்றியமைப்பு செய்யப்பட்ட விவகாரம் அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட தொடர் கோரிக்கைகள் மற்றும் மனுக்களை கவனமாக ஆய்வு செய்த பிறகு, இந்தச் சொத்துவரி மறுமதிப்பீடு நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி வைக்க சென்னை பெருநகர மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதன்படி, வரி மாற்றியமைக்கப்படுவதற்கு முன்பு நடைமுறையில் இருந்த பழைய வரித் தொகையே மீண்டும் அமலுக்கு வருகிறது.

தீர்வு

செலுத்திய பணத்திற்கு என்ன தீர்வு?

மாற்றியமைக்கப்பட்ட புதிய வரித் தொகையை ஏற்கனவே செலுத்திய சொத்து உரிமையாளர்களுக்கு, அவர்கள் செலுத்திய கூடுதல் தொகையானது அடுத்தடுத்த அரையாண்டுகளுக்கான முன்பண வரியாக ஈடு செய்யப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனால் சென்னை பொதுமக்கள் பெரும் நிம்மதியடைந்துள்ளனர்.

ADVERTISEMENT