சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவைக்கான முன்பதிவு துவங்கியது
இந்தியாவின் அதிவேகமான 'வந்தேபாரத்' ரயில் சேவைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது. இதனிடையே நாட்டின் 12வது வந்தேபாரத் ரயில் சென்னை-கோவை இடையே இயக்க முடிவுசெய்யப்பட்டு அதற்கான பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. நாளை(ஏப்ரல்.,8)மதியம் 3மணியளவில் சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையினை பிரதமர் மோடி துவக்கி வைக்கவுள்ளார். இதற்காக அவர் நாளை காலை சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த விமான முனைய கட்டிடத்தினை அவர் துவக்கி வைக்கிறார். அதன் பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையாறு வரும் மோடி, கார் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் ரயிலினை கொடியசைத்து துவக்கி வைக்கவுள்ளார்.
6 மணிநேர பயணத்திற்கு ரூ.1,057 முதல் ரூ.2,310 வரை டிக்கெட்டின் விலை நிர்ணயம்
இந்நிலையில் இந்த வந்தே பாரத் ரயில் சேவைக்கான முன்பதிவானது இன்று துவங்கியுள்ளது. 6 மணிநேர பயணத்திற்கு ரூ.1,057 முதல் ரூ.2,310 வரை டிக்கட்டின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலானது காலை 6 மணிக்கு கோவையில் இருந்து கிளம்பி சென்னைக்கு 11.50க்கு வந்தடையும். மீண்டும் மதியம் 2.25 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு இரவு 8.15க்கு கோவைக்கு சென்றடையும் என்று கூறப்படுகிறது. மேலும் உணவுடன் சேர்த்து குளிர்சாதன சேர் கார் கட்டணம் ரூ.1,215, எக்ஸிகியூட்டிவ் சேர் கார் கட்டணம் ரூ.2,310 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உணவு வேண்டாம் என்றால் ரூ.1,057 மற்றும் ரூ.2,116 முறையே வசூல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.