சென்னையில் மூளை சாவு அடைந்த பாகிஸ்தானியர்-உடல் உறுப்பு தானம் செய்ய அனுமதி மறுப்பு
சென்னையில் உள்ள ஓர் மருத்துவமனையில் 52 வயதுடைய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் மருத்துவர்களிடம் விருப்பம் தெரிவித்து உள்ளார்கள். அதற்கு இறந்தவரின் வாரிசுகள் அனைவரிடமும் கையெழுத்து பெறமுடியுமானால் மட்டுமே, உடல் உறுப்புகளை தானம் செய்ய முடியும் என்று தமிழ்நாடு அறுவை சிகிச்சை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த விதிமுறை சட்ட சிக்கல்களை தவிர்க்கவே பின்பற்றப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் குறுகியகால அவகாசத்தில் அனைவரின் கையெழுத்தையும் பெறமுடியாத காரணத்தினால் மூளைச்சாவு அடைந்த நபரின் உறவினர்கள் அவரது உடலை வீட்டிற்கு எடுத்துச்செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நுரையீரல் செயலிழந்து, சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தான் நோயாளி, கடந்த வெள்ளிக்கிழமை(பிப்.,3) அன்று உடல்நிலை மோசமடைந்து மூளைச்சாவு அடைந்துள்ளார்.
அனைத்து சட்டபூர்வ வாரிசுகளும் கையெழுத்திட வேண்டும்-மாற்று அறுவை சிகிச்சை அதிகாரி
இதனையடுத்து சிலமணி நேரங்களுக்கு பிறகு அவர் மூளைச்சாவு அடைந்ததாகவும், அவரது நுரையீரல் தவிர மற்ற உறுப்புகள் நல்ல நிலையில் உள்ளதால், உடல்உறுப்பு தானம் செய்யவிரும்பினால் செய்யலாம் என மூத்த இருதய மருத்துவரான சுரேஷ் ராவ் அவரது குடும்பத்தாரிடம் கூறியதாக தெரிகிறது. தொடர்ந்து, ரஷியாவை சேர்ந்த கல்லூரி ஆசிரியரான அவரது மனைவி அதற்கு ஒப்புக்கொண்டதால் அனைத்து ஏற்பாடுகளும் நடந்துள்ளது. இதனால் மருத்துவ நிர்வாகம் மாநில மாற்று அறுவைசிகிச்சை அதிகாரிக்கு தகவலளித்துள்ளது. அங்குவந்த அதிகாரி இதுகுறித்து அறிந்த பின்னர், இறந்தவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்பதால் அவரது சட்டபூர்வமான வாரிசுகள் அனைவரும் கையெழுத்திட வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையத்திடம் அவர் உறவினர்கள் பெற்ற என்.ஓ.சி.சான்றிதழும் வீணானது என்பது குறிப்பிடத்தக்கது.