சென்னையில் 17 நாட்கள் நடந்த சர்வதேச புத்தக கண்காட்சி - ரூ.15 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை
சென்னையிலுள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 46வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியை ஜனவரி 6ம் தேதி தமிழக முதல்வர் துவக்கிவைத்தார். இதில் பல்வேறு பதிப்பாளர்கள் 1000க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைத்து புத்தகங்களை விற்பனை செய்து வந்தனர். இந்த கண்காட்சியில் புத்தகங்கள் தனித்தனி அரங்குகள் அமைத்து பிரித்து வைக்கப்பட்டிருந்ததால் வருவோர் தங்களுக்கு வேண்டியவைகளை வாங்கி செல்ல எளிதாக இருந்தது என்று கூறப்படுகிறது. தொடர்ந்து 17 நாட்கள் நடந்த இந்த புத்தக கண்காட்சி நேற்று(ஜன.,22) முடிவடைந்தது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இந்த புத்தக திருவிழாவிற்கு அதிக வாசகர்கள் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அதன்படி, இந்த 17 நாட்களில் 16 லட்ச வாசகர்கள் வருகை தந்து சென்றுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.
அதிகரித்த வாசகர்கள் கூட்டம் - ரூ.15 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்று தீர்ந்தது
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக புத்தக கண்காட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக கலந்துகொள்ள முடியாமல் இருந்த புலம்பெயர் எழுத்தாளர்கள், தமிழர்கள் என பலரும் இதில் பங்கேற்றனர். புத்தக வாசிப்பாளர்களை சந்திக்க பல எழுத்தாளர்களும் வருகை தந்திருந்தனர். புத்தகங்களை வாங்குவோர் வசதிக்காக டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த ஏதுவாக ஜியோ, ஏர்டெல் நெட்வொர்க் டவர்கள் அமைக்கப்பட்டதோடு, பிஎஸ்என்எல் சார்பில் வைஃபை வசதியும் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த கண்காட்சியில் ரூ.15 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்கப்பட்டுள்ளது என்று பபாசி செயலாளர் முருகன் தகவல் அளித்துள்ளார். மேலும் 40க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்துகொண்ட தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட கண்காட்சி ஜனவரி 16,17 மற்றும் 18 ஆகிய மூன்று தேதிகளில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.