தமிழகம் முழுவதும் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்: 1.10 லட்சம் போலீசார் பாதுகாப்பு, பட்டாசு வெடிக்கத் தடை
செய்தி முன்னோட்டம்
2026-ம் ஆண்டு பிறப்பதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் புத்தாண்டை கொண்டாட தமிழக காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம் 1.10 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் கூடுதல் கமிஷனர்கள் தலைமையில் 19,000 போலீசார் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வணிக வளாகங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க டிரோன்கள் மற்றும் CCTV கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
கட்டுப்பாடுகள்
முக்கிய கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள்
சென்னையில் பொது இடங்களில் பட்டாசு வெடிக்க மாநகர காவல்துறை கடும் தடை விதித்துள்ளது. நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகளில் நடைபெறும் கொண்டாட்டங்கள் அனைத்தும் நள்ளிரவு 1 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும். சென்னையில் மட்டும் 425 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 30 சாலைப் பாதுகாப்பு குழுக்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனம் பறிமுதல் செய்யப்படுவதோடு, அவர்கள் மீது பதியப்படும் வழக்கு எதிர்காலத்தில் பாஸ்போர்ட் மற்றும் வேலைவாய்ப்பு சரிபார்ப்பின் போது (Police Verification) பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.