சென்னையில் ஆவின் பால் கெட்டுப்போன விவகாரம் குறித்து அதிகாரிகள் விளக்கம்
தமிழ்நாடு முழுவதும் அண்மைக்காலமாக பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிவருகிறது. பால் கொள்முதல் விலையினை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பால் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்று ஆவின நிர்வாகம் கூறினாலும் சென்னையில் பால்தட்டுப்பாடு இருந்து கொண்டுத்தான் உள்ளது. இந்நிலையில் சென்னை அம்பத்தூர் பால்பண்ணையில் இருந்து அனுப்பப்பட்ட 60ஆயிரம் லிட்டர் பால் கெட்டுப்போனதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன்படி இந்த பால் உற்பத்தியின் போது, பால்பவுடர் மற்றும் வெண்ணெய் சரியாக சமன்படுத்தப்படாததால் கெட்டுப்போயுள்ளது என்று பால் முகவர்கள் தெரிவித்துள்ளனர். நகரின் பல பகுதிகளில் பால் கெட்டுப்போய்விட்டது என்றுகூறி பொதுமக்கள் பலர் வேறு பால் பாக்கெட்டுகளை பெற்றுச்சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கு தற்போது ஆவின் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளதோடு விளக்கமும் அளித்துள்ளார்கள்.
வேறு இயந்திரம் தயார் செய்த காரணத்தினால் பால் விநியோகத்தில் சற்று தாமதம்
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், அம்பத்தூர் ஆவின்பால் பண்ணையில் பால் பதப்படுத்தும் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் பால்பவுடர் மற்றும் வெண்ணெய் சரியாக பதப்படுத்தப்படாத காரணத்தினால் பால் கெட்டியாக இருந்துள்ளது. அதனை அறியாமல் விநியோகம் செய்யப்பட்டதால் பால் கெட்டுப்போனதாக புகார்கள் எழுந்துள்ளது. ஆனால் பால் கெட்டுப்போகவில்லை. அதனை சுடவைத்து பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளனர். தொடர்ந்து பழுதான இயந்திரத்திற்கு பதிலாக வேறுஇயந்திரம் தயார்செய்யப்பட்டுள்ளது. அந்த இயந்திரத்தினை தயார்செய்வதில் ஏற்பட்ட காலத்தாமதம் காரணமாகவே நேற்று(மார்ச்.,27)காலையில் பால் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டது. எனினும், பால் விநியோகிப்பதில் அட்டைதாரர்களுக்கு எவ்வித தாமதமும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள். மேலும் பால் தட்டுப்பாட்டினை சமாளிக்க மகாராஷ்டிராவில் இருந்து பால்பவுடர், வெண்ணெய் கொள்முதல்செய்யப்பட்டு, அதனை சமன்படுத்தப்பட்டு (பச்சை பால்பாக்கெட்) விநியோகம் செய்யப்படுவதாக தெரிகிறது.